நடிப்புலக மேதை சிவாஜி


தமிழ்நாட்டில் நடிப்புக் கலைக்கு இலக்கணம் வகுத்த கோமகன் . சினிமாதான் சகலமும் என்றாகி விட்ட தமிழ் சமுதாய சூழலில், ஒரு ஐம்பதாண்டு காலம் தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப் போட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தீந்தமிழை வளர்த்தவர்கள், பரப்பியவர்கள் என்ற வகையில் சான்றோர் பலரை நம்மால் சுட்டிக்காட்ட இயலும். ஆனால் அமிழ்தினும் இனிதான தமிழை, தமிழ் மக்களுக்கு உச்சரிக்க கற்றுத் தந்தவர் என்றால் அந்தப் பெருமை சிவாஜி கணேசன் ஒருவரையே சாரும். கலைஞர் கருணாநிதியின் கன்னல் தமிழ் வசனங்களை தனது சிம்மக் குரலால் சாஸ்வதமாக்கியவர் சிவாஜி. தமிழ் சினிமாவில் யாருக்கும் கிடைக்காத ஒரு அரிய அமைப்பு சிவாஜிக்கு வாய்த்தது. அவர் பராசக்தியில் அறிமுகமாகியபோது கோலிவுட்டில் கதாநாயகர்கள் பஞ்சம். அதை சிவாஜியும், அவரை திரையுலகினரும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். ஆக்ஷன் படம் என்றால் எம்ஜிஆர், காதல் படம் என்றால் ஜெமினி என்று இருந்த நிலையில், தன் மீது எந்த முத்திரையும் விழாமல் பார்த்துக் கொண்டார் சிவாஜி. அதன் காரணமாக சரித்திரம், புராணம், நகைச்சுவை, வில்லன், காதல், குடும்பம் என்று சகலவிதமான ரோல்களில் அவரால் பிரகாசிக்க முடிந்தது. படங்களில் நடிக்கும் போது, ஏற்று நடிக்கும் கதாபாத்திரமாகவே மாறிவிடுவது சிவாஜியின் வழக்கம். அதனால் தான் இன்றுவரை சிவபெருமான், வ.உ.சி., கட்டபொம்மன், கர்ணன், ராஜராஜ சோழன், அப்பர் ஆகியோரை சிவாஜியின் உருவில் தமிழ் மக்கள் கண்டு வருகிறார்கள். சிவாஜியை இந்த உயரத்திற்கு கொண்டு சென்றதில் அவரது நாடக அனுபவம், பாடி லாங்வேஜ், கர்ஜிக்கும் குரல் ஆகியவை முக்கிய காரணங்கள். சராசரி தமிழனின் உயரம்தான் சிவாஜிக்கும். ஆனால் தனது அற்புதமான பாடி லாங்க்வேஜ் மூலம் 6 அடிக்கும் அதிகமாக விஸ்வரூபம் எடுக்கும் திறன் அவருக்கு இருந்தது. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்ததற்காக ஆசிய- ஆப்ரிக்க திரைப்பட விழாவில் இரண்டு கண்டங்களிலும் சிறந்த நடிகர் விருதுக்கு சிவாஜி தேர்வு செய்யப்பட்டார். விருதை வாங்க சிவாஜி மேடைக்குச் சென்றபோது, தேர்வுக்குழுவினர் ஆச்சர்யப்பட்டனர். சிவாஜியின் உயரம் இவ்வளவுதானா? ஆனால் படத்தில் அதிக உயரமாகத் தெரிகிறாரே என்று கேட்டார்கள். அதனால் தான் நடிகர் கமல் ஒரு பேட்டியில், என்னிடம் சிவாஜியின் உயரம் எவ்வளவு என்று கேட்டால், ஐந்து அடியிலிருந்து ஆறரை அடி வரை என்று கூறுவேன். அவர் அப்பராக நடித்தால் 5 அடியில் இருப்பார். ராஜராஜ சோழனாக நடித்தால் 6 அடிக்கு மேல் இருப்பார் என்று கூறினார். சிவாஜி படிக்காதவர் என்றாலும் வக்கீல், போலீஸ், தொழிலதிபர் என்று எந்த வேடத்தில் நடித்தாலும் அந்த வேடத்திற்கு ஏற்ப நாகரீக நடை, உடை பாவனைகளிலும் ஆங்கில உச்சரிப்பிலும் கலக்குவார். தமிழ்நாட்டில் இருக்கும்போது வேஷ்டி, சட்டை அணியும் பழக்கமுடைய சிவாஜி, வெளிநாடு செல்லும்போது கோட், சூட் அணிந்து டீக்காக செல்வார். அப்போது அவருடைய தோரணை ஒரு சீமான் போல் இருக்குமாம். ஒரு முறை சிவாஜியும் அவரது மகன் ராம்குமாரும் அமெரிக்கா சென்றார்கள். அப்போது சிவாஜியின் தோரணையைப் பார்த்து, அவரை அமெரிக்க கஸ்டம்ஸ் அதிகாரிகள் அதிகம் சோதிக்காமல் விட்டுவிட்டார்கள். அவருக்குப் பின்னால் வந்த ராம்குமாரை குடைந்து விட்டார்களாம். இதை ராம்குமார் வியப்புடன் ஒரு பேட்டியில் கூறினார். சிவாஜியிடம் இன்னொரு சிறப்பம்சம், ஒவ்வொரு கேரக்டரிலும் அவர் காட்டும் வித்தியாசம். கிழவர் வேடத்தில் சிவாஜி எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். ஆனால் திருவருட்செல்வர் படத்தின் அப்பர் வேடம், நவராத்திரி டாக்டர் வேடம், தெய்வமகன் அப்பா வேடம், தேவர் மகன் அப்பா வேடம் என ஒவ்வொன்றிலும் பாடி லாங்குவேஜ், வசன உச்சரிப்பு ஆகியவற்றில் பெரும் வித்தியாசம் காட்டியிருப்பார். இதே வித்தியாசத்தை நாயகன் கமல், ஒரு கைதியின் டைரி கமல், இந்தியன் கமலிடம் காணமுடியாது. பொதுவாக சிவாஜி மீது கூறப்படும் குற்றச்சாட்டு அவர் ஓவர் ஆக்டிங் பண்ணுகிறார் என்பது. இதற்கு பதிலளிக்கும் முன்பு, உலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராக மதிக்கப்பட்ட, மறைந்த ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ, நடிப்பிற்கு விளக்கமாக கூறியதை குறிப்பிட விரும்புகிறேன். அஞிணாடிணஞ் டிணாண்ஞுடூஞூ டிண் ணிதிஞுணூ என்றார் பிராண்டோ. இயல்பிலிருந்து திரிந்தது தானே நடிப்பு. மேலும் சிவாஜி, நாடகத்துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர். நாடக மேடையில் மிதமிஞ்சிய நடிப்பு மட்டுமே வேண்டப்படும். அளவுக்கதிகமான பாடி லாங்வேஜ் மூலம் மட்டுமே கடைசி வரிசை ரசிகர்கள் வரை கதாபாத்திரத்தை கொண்டு சேர்க்க முடியும். அப்படி நடித்துப் பழக்கப்பட்டவர், சினிமாவில் நுழைந்தபோது அவரிடம் தேவையான அளவு நடிப்பை இயக்குநர்கள் பெற்றிருக்க வேண்டும். சிவாஜி ஒரு காட்டாறு. அதற்கு அணை கட்ட மறந்து விட்டு, வேகம் அதிகமாக இருக்கிறது என்று ஆற்றின் மீது குறை கூறுவது சரியில்லை.எந்த வடிவிலும் குடம் செய்வதற்கு ஏதுவாக குழைவான மண்ணாக சிவாஜி இருந்தார். அவரிடம் இருந்து தேவையான அளவை தங்களுக்கு எடுத்துக் கொண்டு, சரியாகப் பயன்படுத்தியது பாரதிராஜாவும் (முதல் மரியாதை), கமலும் (தேவர்மகன்) தான். நடிக்கவே தெரியாதவர் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து, அதன் மூலம் அரியாசனத்தைப் பிடிக்கும் அவலம் எல்லாம் நேர்ந்த தமிழ்நாட்டில், ஓவர் ஆக்டிங் என்ற பெயரில் ஒரு உன்னத கலைஞனை குறைத்து மதிப்பது முற்றிலும் சரியானதில்லை. இப்போது இருக்கும் நடிகர்கள் யாவரும், சிவாஜியின் பாதிப்பின்றி தங்களால் ஒரு படத்தில் கூட நடிக்க முடியாது என்று கூறுவதிலிருந்து அந்த மகாநடிகனின் சிறப்பு தெளிவாகும். இவர்கள் மட்டுமென்ன, இனி வரும் நடிகர்கள் கூட சிவாஜியைப் புறக்கணிக்க முடியாது. ஏனென்றால் அவர் நடிப்புலகின் அரிச்சுவடி.

_

1 comment:

  1. நடிப்பில் ஓவர் ஆக்டிங் என்ற ஒன்றே கிடையாது... சாதாரணமாக பார்த்தோமானால் ஒருவர் போல ஒருவர் இல்லை..

    ReplyDelete