குற்றப்பரம்பரை சட்டம் - தோற்றம்

தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால்


ஓத்தாங்கு ஒறுப்பது வேந்து       --(குறள்: 561)

        19ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் பரவலாக, வங்காளத்தில் குறிப்பாக பெருகிவந்த குற்றங்களை அப்போதைய ஆங்கில அரசு ஆராயத் தொடங்கியது.

குற்றங்களின் தன்மை, இடம், எண்ணிக்கை, குற்றவாளிகளின் குணாதிசியங்கள், அவர்களுக்கு இடையே ஆன தொடர்புகள், ஒற்றுமைகள் ஆகியவற்றை ஆங்கிலேயர் கவனமாக குறிப்பெடுத்தனர்.

பல மாறுபட்ட தேசிய மொழிவாரி இனங்களின் கூட்டுகலவையாக விளங்கிய இந்தியா அவர்களுக்கு புரியாத புதிராகவே இருந்தது.

இருப்பினும் தங்களின் ஆராய்ச்சி முடிவில் தகீ (Thuggee/Thug) போன்ற குறிப்பிட்ட சில இன மக்கள் குற்றங்களின் முக்கிய காரணியாக இருப்பதை கண்டுபிடித்தனர்.

தகீ (thuggee) இன மக்கள் நாடோடி கொள்ளையர்களாக 17, 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்தனர்.

வியாபாரிகள், அதிலும் குறிப்பாக நெடுந்தொலைவு நடந்தும், குதிரையிலும் செல்லும் வியாபாரிகளே இவர்களின் முக்கிய இலக்காகினர்.

கொள்ளைக்கு இடையூறாய் உரிமைதாரர் இருப்பதால், பெரும்பாலும் கொலையும் களவின் ஒரு பகுதியாகவே போனது.
20 லட்சதிற்கும் மேற்ப்பட்ட மக்களை தகீயர் கொன்றிருப்பதாக கின்னஸ் புத்தகம் கூறுகிறது.

பெரும்பான்மை மக்களிடமிருந்து விலகி காட்டு பகுதிகளில் வாழ்ந்த இவர்களின் கலாசாரம், பண்பாடு ஆகியவை சராசரி மக்களை விட்டு வேறுபட்டு நின்றது.

சீக்கிய கள்ளர்கள், இசுலாமிய கள்ளர்கள் ஆகியோர் இருந்தபோதும் 'காளி' வழிபாடு செய்யும் இந்து கள்ளர்களே அதிக எண்ணிக்கையில் இருந்தனர். (குறிப்பு: தமிழ்நாட்டில் வாழும் "கள்ளர்" இன மக்கள் அல்ல)

கொள்ளையை ஒழிக்கும் அளவுக்கு பொறுமையோ, அவகாசமோ, ஆர்வமோ இல்லாத ஆங்கிலேயர் கொள்ளையர்களை ஒழிக்க முடிவுசெய்தனர்.

வில்லியம் ஸ்லீமன் (William Sleeman)தலைமயிலான "Thuggee and Dacoity Department" ஆயிர கணக்கான தகீ இனத்தாரை தூக்கிலிட்டும், நாடு கடத்தியும், வாழ்நாள் சிறை தண்டனை விதித்தும் வங்காளத்தை சுற்றி வழிப்பறி, கொள்ளை சம்பவங்களுக்கு முற்றுபுள்ளி வைத்தனர். குறிப்பாக 1835 முதல் 1850 வரை சுமார் 3000க்கும் மேற்பட்ட கள்ளர்கள் நசுக்கப்பட்டனர்.

அடக்குமுறை வெற்றியடைந்ததை ஒட்டி நாடு முழுவதும் குற்றங்களை குறைக்கவும், தடுக்கவும் இதே முறை கொண்டு வருவதாக தீர்மானம் நிறைவேறியது.

இதன் சட்ட வடிவமே "குற்ற பரம்பரையினர் சட்டம்" (Criminal Tribes Act 1871).
இதை கொண்டுவந்த நீதிபதி James F. Stephen, இந்த சட்டத்தின் சாராம்சமாக முன்மொழிந்த கூற்று,

"...like weaving, carpentry,.. we speak of professional criminals, tribes whose ancestors were criminals from time immemorial, themselves destined by the caste to commit crime and offend law. The whole tribe should be exterminated, like Thugs"

"கைவினை, தச்சு வேலை போல, (தகீயர் போன்ற)சிலருக்கு களவும் குலத்தொழில், அவர்களை முற்றிலுமாக ஒழிப்பது மட்டுமே குற்றங்களை குறைக்க ஒரே வழி"

இப்படியாக முன்மொழியப்பட்ட சட்டம் பின்னாளில் எவ்வாறு தவறாக பயன்படுத்தப்பட்டு கோடிகணக்கான அப்பாவி மக்களை "பிறவி குற்றாவாளிகளாக" அடையாளப்படுத்தி அவர்களை சமுதாயத்தின் விளிம்பிற்கு தள்ளியது என்பதை வரும் நாட்களில் பார்ப்போம்.


நன்றி : மாய தேவர்

_

No comments:

Post a Comment