தேவர் திருமகன் - வைகோ உரை 4
நேதாஜி :
1938 இல் திரிபுரியில் காங்கிரஸ். இரண்டாவது தடவையாக நேதாஜி காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டி இடுகிறார். நேதாஜியை நாடு விரும்புகிறது. காந்தி அடிகள் விரும்பவில்லை, படேல் விரும்பவில்லை. இன்னும் பலபேர் சேர்ந்து சூழ்ச்சி செய்தார்கள். அவர்கள் சதி செய்தார்கள். பண்டித நேரு அப்பக்கமா? இப்பக்கமா? என்று கடைசிவரை தீர்மானிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருந்தார். நேதாஜியின் பக்கம்தான் அவரது உள்ளம் இருந்தது.
ஆனால், காந்தியாரின் எண்ணத்துக்கு விரோதமாகச் செல்கின்ற துணிச்சல் பலருக்கு இல்லை. மகாத்மா காந்தியின் வேட்பாளராக பட்டாபி சீதாராமையா போட்டி இடுகிறார். வாக்குப்பதிவு நடக்கிறது. அப்போது என்ன சொன்னார்கள்? காந்தி அடிகளின் தரப்பில் சொல்லப்பட்டது, தென்னாட்டில் இருப்பவர்கள், இன்றைய ஆந்திரம் உள்ளிட்ட திராவிட பூமியாக அன்றைக்குத் திகழ்ந்த சென்னை இராஜதானியில் இருப்பவர்கள், பட்டாபி சீதாராமையாவை விரும்புகிறார்கள் என்றபோது, அதேபகுதி பட்டாபி சீதாராமையாவுக்குப் பின்னால் இல்லை, அது நேதாஜிக்குப் பின்னாலேதான் இருக்கிறது என்பதை நிரூபிக்க, இங்கே இருந்து சென்ற தலைவர்கள் பசும்பொன் தேவர் திருமகனாரும், காமராசரும் ஒருசேர நேதாஜிக்கு ஓட்டுப் போட்டார்கள். இதெல்லாம் ஆவணம்!
ஆனால், உட்கட்சி ஜனநாயகம் அன்றைக்கே சிதைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டது. 105 டிகிரி காய்ச்சலில் நேதாஜி துடித்துக் கொண்டு இருந்தபோதும், ‘காரியக்கமிட்டி கூட்டத்தின் முடிவை நாங்கள் நிறைவேற்றுவோம், காந்தி சொல்வதுதான் காரியக் கமிட்டி. காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு அதிகாரம் இல்லை’ என்று ஜனநாயகத்தைச் சிதைத்தனர். அந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை எல்லாம் விவரிப்பதற்கு நேரம் இல்லை.
நேதாஜி காய்ச்சலோடு மேடையில் வந்து இருந்தார். தானாக ராஜினாமா செய்தார். அதற்குப்பிறகுதான் ‘பார்வர்டு பிளாக்’ என்ற பெயரை, பத்திரிகைக்குச் சூட்டினார். கட்சிக்கும் சூட்டினார். ஆக, காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் சிதைக்கப்பட்டு, அவர் வெளியேற்றப்பட்டார். மேற்கு வங்கத்தில் கல்கத்தாவில் இருக்கிற வெள்ளைக்காரன் நீல் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். எப்படி நீங்கள் அந்தப் பேராராட்டத்துக்கு அறிவிப்பு கொடுக்கலாம்? என்று கட்சியில் இருந்து நடவடிக்கை எடுத்தார்கள். நேதாஜி எந்தத் தவறும் செய்யவில்லை. அந்தக் காலகட்டத்தில்தான் ‘பார்வர்டு பிளாக்’ கட்சி உதயமாயிற்று. வங்கத்துச் சிங்கத்தின் வரலாறு, தியாக வரலாறு. ஈடு இணையற்ற வரலாறு.
நான் இன்றைக்கு மதுரையில் சொல்கிறேன். தோழர்களே, வங்கத்துச் சிங்கம் நேதாஜியின் போராட்டத்துக்கு உரிய இடத்தை இந்த நாட்டுச் சரித்திரத்தில் தருவதற்கு பலர் மறுத்தாலும்கூட, அவருக்கு நிகராக எவரும் இந்த நாட்டில் போராடவில்லை.
அவருடைய படையில், 40,000 தமிழர்கள் இருந்தார்கள். வங்காளிகள் அல்ல - பஞ்சாபிகள் அல்ல - மராத்தியர்கள் அல்ல - குஜராத்திகள் அல்ல - ஒரியாக்காரர்கள் அல்ல - எவரும் இல்லை. நேதாஜியின் படையில் 40,000 தமிழர்கள் இருந்தார்கள்.
அதனால்தான், ‘நான் மீண்டும் பிறந்தால் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்’ என்று நேதாஜி சொன்னார்.
அவருக்காகத் தமிழர்கள் உயிர்களைக் கொடுத்தார்கள். துப்பாக்கித் தோட்டாக்களை மார்பில் ஏந்தினார்கள். அந்தப் பட்டாளத்தின் அணிவகுப்புக்கு அடித்தளமாக இருந்தவர், பசும்பொன் தேவர் திருமகனார் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
சென்னையில் நேதாஜி :
அப்படிப்பட்ட பசும்பொன் தேவர் திருமகனார், 1939 ஆம் ஆண்டு சென்னைக்கு நேதாஜியை அழைத்துக் கொண்டு வருகிறார். பரபரப்பான சூழல். காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். பார்வர்டு பிளாக் கட்சி தோன்றிவிட்டது. சென்னையில் செப்டம்பர் 3 ஆம் தேதி பேசுகிறார்.
இந்து பத்திரிகை சிறப்பு பதிப்பு போட்டு கடற்கரைக் கூட்டத்தில் விநியோகம் செய்கிறது. உலகத்தைத் திடுக்கிடச் செய்கின்ற செய்தி வந்துவிட்டது. ஆம், ஹிட்லர் தன்னுடைய போரைத் தொடங்கிவிட்டார். ஆக்கிரமிப்பைத் தொடங்கிவிட்டார். செகோஸ்லோவியாவுக்கு உள்ளே நாஜிப்படைகள் நுழைந்துவிட்டன. இந்தச் செய்தியை சிறப்புப் பதிப்பில் பிரசுரித்த பத்திரிகை வெளிவருகிறது. துண்டுச் சீட்டும் மேடையில் போகிறது நேதாஜிக்கு. அவர் இந்திய அரசியலைப் பேசிக்கொண்டு இருக்கிறார்.துண்டுச்சீட்டு வந்தவுடன், உலக அரசியல் பக்கம் திருப்பினார் நேதாஜி.
நான் எல்லோர் உரைகளையும் படித்து இருக்கிறேன். பண்டித ஜவஹர்லால் நேரு எழுதிய உலக சரித்திரக் கடிதங்களைப் போன்ற ஒரு நூல், இதுவரை இந்தியாவில் இன்னொருவர் எழுதவில்லை. அற்புதமான நூல். உரைகள் என்று பார்த்தால், பல்கலைக் கழகங்களில், நகராட்சி மன்றங்களில், கல்லூரி வளாகங்களில், மாநாட்டு மேடைகளில் நேதாஜியின் பேச்சு எந்தப் பொருளை எடுத்தாலும் சரி, மெய்சிலிர்க்க வைக்கும். நாடி நரம்புகளில் ஓடுகின்ற குருதியைச் சூடேற்றும். சிந்திக்க வைக்கும் அற்புதமான பேச்சாளர்.
அப்படிப்பட்ட பேச்சாளர், பன்னாட்டு அரசியல் பற்றிப் பேசுகிறார். அங்கு இருந்தே சுற்றுப் பயணத்தை இரத்து செய்துவிட்டுப் போகலாமா? என்று நினைக்கிறார். தேவர் திருமகன் சொல்கிறார், மதுரையைச் சுற்றிய சுற்றுப் பயணம் ஏற்பாடு செய்து இருக்கிறேன். நீங்கள் கட்டாயம் வர வேண்டும்‘ என்கிறார். நீண்டநேரம் ஆலோசனை செய்து, மதுரையில் மட்டும் பேசுவது என்று முடிவு எடுக்கிறார்கள். இதே மதுரை மாநகரில் 6 ஆம் தேதி நேதாஜியும், தேவர் திருமனாரும் பேசினார்கள். கடைசியாக நேதாஜி பேசியது மதுரையில்தான்!
இதுதான் வேளை :
இங்கே பேசிவிட்டு நேதாஜி, தேவர் திருமகனை அழைத்துக் கொண்டு நாகபுரிக்குப் போகிறார். அங்கே காங்கிரஸ் கட்சியின் கூட்டம். அந்த உறுப்பினர்களை மட்டும் அல்ல, ஜெயப்பிரகாக்ஷ் நாராயணன் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி நடத்தினார் அல்லவா, அவர் போன்ற தலைவர்களையும், பல தலைவர்களை அழைத்து ஒரு கூட்டம், மாராட்டிய மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்தக்கூட்டத்துக்கு பசும்பொன் தேவர் திருமகனாரையும் அழைத்துக் கொண்டு போகிறார் நேதாஜி. அக்கூட்டத்தில் காந்திஜி உட்கார்ந்து இருக்கிறார், பண்டித ஜவஹர்லால் நேரு இருக்கிறார். நேரு நேதாஜியின் மீது மிகுந்த அன்பாக இருந்தவர்.
கூட்டம் நடக்கிறது. நேரு சொல்கிறார்:‘உலகத்தில் பல நாடுகள் பிரிட்டனை ஆதரிக்கின்றன. எனவே, ஹிட்லரை எதிர்த்து நாமும் இங்கிலாந்தை ஆதரிப்போம்’ என்கிறார். உடனே நேதாஜி கேட்கிறார், ‘பல நாடுகள் என்று சொல்கிறீர்களே, எந்த நாடுகள்? ஆஸ்திரேலியாவா? கனடாவா? இல்லை காலனி நாடுகளாக இருக்கக்கூடிய இலங்கை, பர்மா போன்ற நாடுகளா? எந்த நாடுகள்?’ என்று கேட்கிறார். பதில் சொல்லவில்லை நேரு.
அதற்குப்பிறகு இங்கிலாந்து நாட்டு ஆதரவு நிலை எடுக்கிறபோது, காந்தியாரைப் பார்த்து நேதாஜி சொல்கிறார், ‘கீதையைப் படிக்கிறீர்கள் அர்ஜூனனுக்குக் கண்ணன் சாரத்தியம் செய்தார், கெளரவர்களை அழிப்பதற்காக. அதைப்போல நாட்டை விடுவிக்கின்ற போரில் நீங்கள் கண்ணனாக இருந்து வழி நடத்துங்கள். இது பொருத்தமான வேளை. நம்மை அடிமைகளாக வைத்து இருக்கின்ற பிரிட்டிக்ஷ்காரனை விரட்டுவதற்குச் சரியான நேரம்’ என்று சொல்கிறார்.
வாக்குவாதம் வருகிறது. அதனால், கையில் வைத்து இருக்கின்ற பேனாவை எடுத்து மேஜையில் குத்துகிறார் பண்டித நேரு. அதுமட்டும் அல்ல, ‘ You you you ’ என்று நேதாஜியைப் பார்த்து நேரு சொல்கிறார். அவருக்கு முன்கோபம் அதிகம் வரும்.
நேதாஜி கோபப்படவில்லை. காந்தியாரைப் பார்த்துச் சொல்கிறார். காலமெல்லாம் நீங்கள் அகிம்சையைப் போதித்தீர்களே, யாரை முன்னிறுத்தி நீங்கள் அகிம்சையைப் போதித்தீர்களோ அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்று பாருங்கள். அழைத்ததால் வந்தேன். எப்படிப்பட்ட மரியாதை கொடுக்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி வெளியேறினார். அந்தக் கூட்டத்தில் பார்வையாளராக பசும்பொன் தேவர் கலந்து கொண்டார்.
அதன்பிறகு நேதாஜி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் உண்ணாநோன்பு இருந்து உயிரை முடித்துக் கொள்ளத் தீர்மானித்தார். வேறு வழி இல்லாமல் விடுதலை செய்தார்கள். அவர் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டார்கள். கொல்கத்தாவில் அவருடைய வீட்டு மாடியிலேயே தங்கி இருக்கிறார். அடியேன் அந்த வீட்டுக்குச் செல்கிற வாய்ப்பு கிடைத்தது. நேதாஜியின் அண்ணன் மகன் சிசிர் குமார் போஸ் அவர்கள், ஜனவரி 23 ஆம் தேதி நேதாஜி பிறந்த நாள் விழா கூட்டத்தில் பேசுவதற்கு என்னை அழைத்துச் சென்றார்.
அவர் தங்கி இருந்த அறை, படுத்து இருந்த படுக்கை எல்லாம் அப்படியே இருக்கிறது. அந்த இடத்தில் இருந்து ஒரு நள்ளிரவு நேரத்தில் சிசிர்குமார் போஸ் காரை ஓட்ட, அங்கிருந்து புறப்பட்டு, ஆப்கானிஸ்தான் காபூல் வழியாக, ரக்ஷ்யா சென்று, மாஸ்கோ வழியாக பெர்லின் போய்ச் சேர்ந்தார் நேதாஜி. இது சரித்திரம்.
அப்படிப்பட்ட நேதாஜி அவர்களோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள் ஆவார்கள். 1962 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி, இத்தென்னாட்டு மக்கள் தைப்பொங்கல் கொண்டாடிக் கொண்டு இருந்தபோது, இந்த மதுரை மாநகரில் தமுக்கம் மைதானத்தில் பசும்பொன் தேவர் திருமகனார் பேசிய கடைசி கூட்டம். அந்தக் கூட்டத்தில் ராஜாஜியும் கலந்து கொண்டார்.
டி.வி.எஸ். விருந்தினர் விடுதியில் இருவரும் சந்திக்கிறார்கள். அங்கிருந்து கூட்ட மேடைக்கு சேர்ந்தே வருகிறார்கள். அந்தக் கூட்டத்தில் ஐந்து இலட்சம் பேர் கலந்துகொண்டதாக அன்றைய செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. வரலாறு காணாத கூட்டம். ஒரு நீண்ட இடைவெளிக்குப்பிறகு மக்கள் பசும்பொன் தேவர் திருமகனாரைப் பார்க்கிறார்கள். ராஜாஜி அமர்ந்து இருக்கிறார். கூட்டத்தில் இருப்பவர்கள் தேவர் திருமகனைப் பார்த்து கைகளைக் காட்டிக்காட்டி, ‘அய்யோ அய்யோ’ என்று வேதனைப்படுகிறார்கள். பலர் அழுகிறார்கள். ‘இப்படி மெலிந்து விட்டாரே, அய்யோ இப்படி ஆகிவிட்டதே’ என்று கூட்டத்தில் இருப்பவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
இரண்டரை மணிநேரம் பேசினாலும்கூட, சிம்மம் போல் நின்று பேசுகின்றவர் தேவர் திருமகன். பேசும்போது, துண்டுக்குறிப்புகளையும் பார்க்க மாட்டார். சோடா அருந்த மாட்டார். தண்ணீர் அருந்த மாட்டார். எத்தனை மணிநேரம் பேசினாலும், இடையில் ஒரு வினாடி கூட வேறுபக்கம் கவனத்தைத் திருப்ப மாட்டார். ‘அர்ஜூனன் கணையும், அம்பின் நுனியும், பறவையின் கழுத்தும் ஒரே நேர்கோட்டில் இருந்தது’ என்று மகாபாரதம் சொல்கிறதே, அதைப்போல எது இலக்கோ, அந்த இலக்கையே குறியாக வைத்துப் பேசுவார்.
ஆனால், அன்றைக்குத்தான் முதன் முதலாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே பேசினார். அவருடைய தோற்றத்தில் ஏற்பட்ட நலிவைப் பார்த்து மக்கள் அழுதார்கள்.
கடுகு அளவும் இல்லை :
அதற்கு முன்னர் நான் ஒன்றைத் தெரிவிக்க வேண்டும். ஏனெனில், சரித்திரத்தில் சில செய்திகள், இல்லாத ஒன்றைக் கறை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற கவலையின் காரணமாக நான் சொல்கிறேன்.
நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. தென்னாட்டில் முதுகுளத்தூர் வட்டாரத்தில் நடக்கக் கூடாத கலவரம் நடந்து விட்டது. இரத்தம் கரைபுரண்டு ஆறாக ஓடியது. உயிர்கள் பலியாகின. குய்யோ முறையோ என்று இருதரப்பிலும் அழுகையும் கண்ணீருமாக இருந்தது. நான் சொல்கிறேன் சகோதரர்களே, தேவர் திருமகனார் உள்ளத்தில் எந்தப் பகை உணர்வும், யாருக்கும் தீங்கு செய்யவேண்டிய எண்ணமும் கடுகு அளவும் கிடையாது என்பதை நான் இந்த மாசிவீதியில் சொல்ல விரும்புகிறேன்.
அப்பொழுது சொன்னார்: ‘ஒடுக்கப்பட்ட சமூகத்து மக்களை - என் அரிஜன சகோதரர்களை யாராவது தாக்கி, அவர்களுக்குத் தீங்கு செய்வீர்களானால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவீர்களானால், என் இருதயத்தைப் பிளந்து இரத்தத்தைக் கொட்டச் செய்கிறீர்கள்’ என்று அறிக்கை விட்டார்.
அவரைப் பொறுத்தமட்டில் அவருடைய ஆயிரம் ஏக்கர் நிலபுலன்களை அள்ளித்தருகிறபோது, அனைத்து சமூக மக்களுக்கும் தலித் சமூகத்துச் சகோதரர்களுக்கும் சேர்த்தே அனைவரும் அவற்றை பயன்படுத்திக் கொள்ளட்டும் என்ற நோக்கம்தான் அவருக்கு இருந்தது.
_
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment