தேவர் திருமகன் - வைகோ உரை 2


எங்கள் வீட்டில் தேவர் :


என் தந்தையார் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தார்கள். அப்பொழுது தென்மாவட்டச் சுற்றுப்பயணத்தில் வந்த பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள், என் கிராமத்துக்கு உள்ளே வருகிறபோது, இன்றைக்கு எப்படி வாலிபச் சிங்கங்கள் தேவர் திருமகன் புகழ் பாடுவதற்கு அடிவயிற்றில் இருந்து முழக்கம் எழுப்பி கர்ஜிக்கிறார்களோ, அதேபோல இளஞ்சிங்கங்கள், வாலிபர்கள், ‘தென்னாட்டுச் சிங்கம் வாழ்க, பசும்பொன் தேவர் முத்துராம லிங்கம் வாழ்க’ என்று முழக்கம் எழுப்பிக் கொண்டு வந்தபொழுது, வாலிபச் சிங்கங்கள் அணிவகுத்துவந்த கார்கள், பசும்பொன் தேவர் திருமகன் வந்த அந்தக் கார் என் வீட்டு வாசலுக்கு முன்னாலே நின்றது.


‘தேவர் ஐயா வருகிறார்கள்’ என்று சொன்னவுடன், கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை வீட்டிலே இருப்பவர்களுக்கு!நான் மிகச்சிறிய பையன். என் தந்தையார் அவர்கள் பதட்டத்தோடு, ஒரு பெரிய தலைவர் நம் வீட்டுக்கு வந்து இருக்கிறாரே என அவரை வரவேற்றார்கள். கம்பீரமான உருவம். நல்ல உடல்நலத்தோடு, பொலிவோடு இருந்தார் தேவர்.


இரும்பிடர்த் தலையார் என்று நான், கரிகாலனை வழிநடத்திய மாபெரும் மன்னனை பற்றி புறநாநூற்றில் படித்து இருக்கிறேன். அப்படிப்பட்ட தோற்றத்தோடு, சுருண்ட கேசங்கள் பின்னால் இருக்க, கண்களில் கம்பீரத்தோடு அவர் வந்து அமர்ந்த காட்சி என் நினைவுக்கு வருகிறது.


‘காங்கிரஸ் கட்சியை ஒருகாலத்தில் நான் கட்டிக்காத்து வளர்த்தவன். அது சுயநலக் கூடாரம் ஆகிவிட்டது. நாட்டைக் கேடு செய்து கொண்டு இருக்கிறது. அதை எதிர்க்க வேண்டும் இந்தப் பகுதியில். அதற்காகவே உங்களைச் சந்தித்து ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப்போகலாம் என் கருத்தை என்று கூற வந்தேன்’ என்று என் தந்தையாரிடம் தேவர் ஐயா தெரிவித்தார்கள்.


‘ஐயா அவர்கள் சொல்கிறபோது, அந்தக் கருத்தை நான் அப்படியே மதித்து நடக்கிறேன்’ என்று என் தந்தையார் சொன்னார்.


பசும்பால் பருகலாமா? தாங்கள் என தந்தையார் கேட்டார்கள். கொண்டுவரச் சொன்னார்கள். பசும்பாலைப் பருகிவிட்டு அடுத்த இரண்டு நிமிடங்களில் அவர் புறப்பட்டு, எங்கள் ஊர் மந்தையில் போய்ப் பேசினார். நான் அவர் காருக்குப் பின்னாலேயே மந்தை வரை ஓடிச்சென்று, அவரது பேச்சைக் கேட்டேன். ஐந்தாறு நிமிடங்கள்தான் பேசினார். மணியான சொற்கள், வெண்கலக் குரலில் வந்து செவியில் விழுந்தன. அடுத்து கார் போயிற்று.

எல்லோரும் காரின் பின்னாலே ஓடிக்கொண்டே இருந்தார்கள்.


சிறையில் கிடந்த சிங்கம் :



அன்று என் மனதில் பதிந்த அந்த உருவம், அவரைப்பற்றி நான் அறிந்துகொண்ட செய்திகள், அவர்மீது எனக்கு மதிப்பை ஏற்படுத்திற்று. இந்தத் தெற்குச்சீமையின் மாபெரும் தலைவராக, வங்கத்துச் சிங்கம் நேதாஜிக்கு நிகரான தலைவராக தெற்கே உலவிய தலைவர் தேவர். அவர் பிறந்தது, அக்டோபர் 30, 1938. வாழ்ந்த நாள்கள் 20,075. அதில் 4,000 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடந்தார். தன் வாழ்வில் ஐந்தில் ஒரு பகுதியை சிறையில் கழித்தவர் அந்தத் தென்னாட்டுச் சிங்கம்.


நாட்டின் விடுதலைக்காக, ஆங்கில ஏகாதிபத்யத்தின் பிடரி மயிரைப்பிடித்து உலுக்குகின்றவராக, அடக்குமுறைக்கு அஞ்சாத தீரராக, எந்தச் சிறையில் அவர் அடைக்கப்பட்டு இருந்தாரோ, அங்கே அவர் எப்படிப்பட்ட நெறிகளைக் கடைப்பிடித்தார் என்று நான் அறிந்து இருக்கிறேன், கேட்டு இருக்கிறேன். நான் சிறையில் இருந்தபோது,

என் வீரச்சகோதரர்கள் பூமிநாதன், வீர.இளவரசன், செவந்தியப்பன், அழகு சுந்தரம், கணேசனோடு சேர்ந்து, எந்தச் சிறையில் தேவர் திருமகனார் இருந்தாரோ அதே வேலூர் சிறையில் இருக்கின்ற பேறு எங்களுக்குக் கிடைத்ததால், அந்தப் பிறந்த நாளையும் அவரது படத்தைக் கொண்டு வந்து வைத்து, சிறைக்கு உள்ளே நாங்கள் கொண்டாடினோம். அந்தத் தகுதியோடு இங்கே பேசுகிறேன்!


தெரிந்து கொள்ள வேண்டும் :

அவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் எண்ணிப் பார்த்தால், பிறந்த ஆறு திங்களில் அன்னையை இழந்தார். ஒரு இஸ்லாமியத் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். ஜாதி எல்லைகளைக் கடந்த தலைவர் அவர். ஆகவேதான் தேவர் திருமகனாரைப் பற்றி மாசி வீதியில் பேசவேண்டும் என்பது, ஏதோ வழக்கமாக அல்ல. என் கடமைகளில் ஒன்றாக, எனக்குக் கிடைத்த பேறாகக் கருதி இங்கே நான் பேசிக் கொண்டு இருக்கிறேன். இந்த இளைஞர் சமுதாயம் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகப் பேசுகிறேன்.


அவருக்குப் பத்தொன்பது வயது ஆயிற்று. 1927 ஆம் ஆண்டு, சென்னையில் காங்கிரஸ் மாநாடு. அந்த மாநாட்டுக்குத் தலைமை ஏற்றவர் டாக்டர் அன்சாரி. தேவர் திருமகனார் அரசியலுக்கு உள்ளே அப்போது நுழையவில்லை. அவர் குடும்பம் பெரிய ஜமீன் குடும்பம். எண்ணற்ற கிராமங்கள் அவருடைய கட்டுப்பாட்டில் ஆளுகைக்கு உள்ளே இருந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலபுலங்கள். ‘எனக்குப் பஞ்சுமெத்தை தெரியாது, பட்டுத் தலையணை தெரியாது,

 பாய்தான் தெரியும்’ என்று சொன்ன தேவர் திருமகன், ஒரு சீமான் வீட்டுப்பிள்ளை. செல்வச் செழிப்புள்ள குடும்பத்து வீட்டில் பிறந்த பிள்ளை. அப்படிப்பட்ட தேவர் திருமகனார், அவருடைய குடும்பத்தில் இருந்த பிணக்குகளால், சிவில் வழக்குகள் தந்தையாரோடு மனத்தாங்கல் ஏற்பட்டது.

_

No comments:

Post a Comment