பின்னர் இமானுவேல் கொலை வழக்கில் முதல் எதிரியாகத் தேவரைச் சேர்த்து, சென்னைச் சிறையிலிருந்து புதுக்கோட்டை சிறைக்கு மாற்றிக் காவலில் வைத்தனர். இமானுவேல் கொலை வழக்கு விசாரணைக்கு கீழ்க்கோட்டும் மேல் கோர்ட்டும் விசேஷக் கோர்ட்டுகளாக அமைக்கப்பட்டு புதுக்கோட்டையிலேயே விசாரணை நடைபெற்று வந்தது. தமிழ்நாடெங்கும், தேவரை விடுதலை செய்யக்கோரி ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடந்தன. மக்களிடையே வெகுஜன எழுச்சி ஏற்பட்டது. அதே சமயம் தேவரை விடுவிக்கக் கோரி ஆலயங்களில் வழிபாடுகள், பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
தேவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில் எந்த மந்திரியும், முதலமைச்சர் உட்பட தென்பாண்டி மண்டலத்திற்குள் நுழைய முடியாத அளவுக்கு, தேவருக்கு ஆதரவான எழுச்சி மக்களிடையே வலுப்பெற்று நின்றது.
தேவர் மீதான கொலை வழக்கு விசாரணை புதுக்கோட்டையில் சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்றது. தேவரை விசாரிக்க, முழு நேர நீதி மன்றம் பனிரெண்டு நாட்கள் தனியாகச் செயல்பட்டது. முப்பத்தேழு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். விசாரணை முடிந்து தீர்ப்புக் கூறும் நாள் அறிவிக்கப்பட்டிருந்தது.
1959 ஆண்டு ஜனவரி மாதம் 6 ம் தேதி இரவு. தங்களது தங்கத் தலைவன் எப்போது விடுதலை ஆவார்? என்று மிகுந்த பேராவலுடன் இரண்டு ஆண்டுகள் காத்துக் கொண்டிருந்த மக்கள் புதுக்கோட்டையில் குவியத் தொடங்கி விட்டனர். சென்னை, சேலம், கோவை, திருச்சி, தஞ்சை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து கார்களிலும், பஸ்களிலும், ரயில்களிலும் புதக்கோட்டைக்கு மக்கள் வெள்ளம் பெருக்கெடுத்துச் சென்று கொண்டிருந்தது. புதுக் கோட்டை நகரமே மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. எங்கும் தேவர் விடுதலை பற்றியப் பேச்சு. தேவரைக் காண அனைவரும் ஏக்கப் பெரு மூச்சு. மாசற்ற தங்கத்தை, பசும்பொன் சிங்கத்தை, மூதறிவு மிகுந்த முத்துராமலிங்கத்தை, தன்னகத்தே தெய்வமாகப் போற்றிடும் தென்னகத்து நேதாஜியைப் பார்க்க வேண்டும் என்ற இதயத்துடிப்பு அனைவரிடமும் இருந்தது. அதே சமயம், ஏதாவது விபரீதத் தீர்ப்பு வந்து விட்டால், என்ன ஆவது? என்ற திகில் கூடி இருந்த அனைவரிடத்திலும் குடி கொண்டிருந்தது. வைகறைப் பொழுது எப்பொழுது விடியும்? என இரவெல்லாம் ஆயிரக்கணக்கான தாய்மார்களும் உறங்காமலே கண் விழித்திருந்தனர். பொழுது புலர்ந்தது கடலென திரண்டிருந்த மக்கள் மனதில் மகிழ்ச்சி ஒரு பக்கம் அதிர்ச்சி ஒரு பக்கம் குடி கொண்டிருந்தது. தீர்ப்புச் சொல்லும் நாள் 1959 ஜனவரி 7 ம் தேதி வந்து விட்டது. இனித் தீர்ப்புச் சொல்லும் நேரத்தை அலைகடலெனத் திரண்டிருந்த மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். சரியாக காலை 11 மணி. நீதிபதி அனந்த நாராயணன் வந்து தன் இருக்கையில் அமர்ந்தார். என்ன சொல்லப் போகிறாரோ? என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நீதிபதியின் அறிவிப்பு அவர்களை ஏமாற்றம் அடையச் செய்து விட்டது. ஏன் அப்படிபட்ட நிலைமை ஏற்பட்டது?
சரியாகப் பதினோரு மணிக்கு வந்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்த நீதிபதி, சில நிமிட நேரம் கழிந்தவுடன், பிற்பகல் 2 மணிக்குத் தீர்ப்பு என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். பெருத்த ஆர்வத்திலும் எதிர்பார்ப்பிலும் இருந்த அந்த மக்களை நீதிபதியின் அறிவிப்பு ஏமாற்றத்துக்கு உள்ளாக்கத்தானே செய்யும்? மீண்டும் நீதிபதி சரியாக 2 மணிக்கு நீதிமன்றத்திற்க வந்து அமர்ந்தார். 50 பக்கங்கள் கொண்ட தனது தீர்ப்பைப் படித்தார்.
"தேவர் மீதுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. இமானுவேல் கொலைக்கும் தேவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று யூகிப்பதற்குக் கூட சாட்சியம் இல்லை. எனவே தேவரை விடுதலை செய்து தீர்ப்பு அளிக்கிறேன்" என்று நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களான குருசாமித் தேவர், காட்டுச்சாமித் தேவர், முனியசாமித் தேவர், சடையாண்டித் தேவர், பெரியசாமித் தேவர் ஆகியோரை சந்தேகத்தின் பலனை அளித்து விடுதலை செய்தார் நீதிபதி. இதர மூன்று பேர்களான அங்குசாமித் தேவர், பேயன் முனியாண்டித் தேவர், தவசித் தேவர் ஆகியோர் கொலைக் குற்றவாளிகளே என்று தீர்மானித்து, ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி.
'தேவர் விடுதலை' என்ற சொல்லைக் கேட்டதும் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சி வெள்ளத்தில் நீந்தினர். ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.தேவர் விடுதலை அடைந்து நீதிமன்றத்திற்கு வெளியே வந்து, மக்களுக்குக் காட்சி தந்ததும், மக்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, ஆரவாரம் செய்து, கோஷங்கள் எழுப்பிக் கரவொலி செய்தனர். தேவருக்கு பலர் பெரும்பெரும் மாலைகளை அணிவிக்க வந்தனர். ஆனால், தேவரோ, "முழு வெற்றிக்குப் பிறகே மகிழ்ச்சி கொள்ள வேண்டும். மாலைகள் எதுவும் அணிவிக்க வேண்டாம். எல்லாம் இறைவன் திருவருள்படி நடக்கும். எனவே மாலைகளை ஆண்டவனுக்கு அணியுங்கள். என் பொருட்டு இத்தனை ஆர்வத்தோடு கூடிய அனைவருக்கும் நன்றி. அமைதியாகக் கலைந்து செல்க" என்று கேட்டுக்கொண்டார்.
விடுதலை ஆனதும் தேவர் முக்கிய தலைவர்களுடன் புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோவில், பிரஹதாம்பாள் கோயில், ஐயனார் கோவில் முதலிய ஆலயங்களில் வழிபட்ட பிறகு, இரவு 8 மணிக்கு ஆடுதுறைக்குப் புறப்பட்டார். அங்கு தேவரின் குடும்ப குருநாதரான ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகள் சமாதியில் அஞ்சலி செலுத்தி வணங்கினார். ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகள், தேவர் விடுதலை ஆவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, புதுக்கோட்டை சிறைக்கு வந்து தேவரைப் பார்த்தார். அப்போது தேவர் சுவாமிகளைப் பார்த்து, "சுவாமி உங்களைப் போன்ற மகான்களின் பாதம் சிறையிலே படலாமா?" என்று கேட்டார்.அதற்கு சுவாமிகள், "உங்களைப் பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். நீங்கள் விடுதலை ஆவிர்கள். ஆனால், அப்போது நான் இருக்க மாட்டேன். அதனால் தான் இப்போது வந்தேன்" என்று கூறினார். அதுபோலவே தேவர் விடுதலை ஆனபோது சுவாமிகள் சமாதியாகி விட்டார். அதனால்தான் விடுதலை ஆனதும் ஆடுதுறைக்குப் போய் சுவாமிகளின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார் தேவர். ஆடுதுறையிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட தேவருக்குப் பிரம்மாண்டமான வரவேற்புக் கொடுக்கப்பட்டது.
பிறகு, ஜனவரி 23ம் நாள் நேதாஜி பிறந்த தினத்தன்று, சென்னையில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டார் தேவர். அன்று மதுரையில் பார்வர்ட் பிளாக் கட்சியினரும், ஜனநாயகக் காங்கிரஸ் கட்சியினரும் ஏற்பாடு செய்திருந்த நேதாஜி பிறந்த நாள் கூட்டத்தில் தேவர் கலந்து கொண்டு பேசினார். அரசியல் விரோதத்திற்காகத் தன்மீது போடப்பட்ட கொலை வழக்கு பற்றியும், தனது செல்வாக்கை அழிக்க, தன்னைப் பின்பற்றும் மக்கள் மீது ஏவி விடப்பட்ட அடக்குமுறையைக் கண்டித்தும், கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டிற்க நீதி விசாரணை வேண்டுமென்றும் வலியுறுத்திப் பேசினார். எல்லா இடங்களிலும் எழுச்சி மிக்க வரவேற்பைப் பெற்ற வண்ணம் தமிழகம் முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல லட்சம் மக்களைச் சந்தித்தார் தேவர். 8.2.1959 ஆம் நாள் சென்னையில் ஜனநாயக காங்கிரஸ் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேவர், காங்கிரஸ் கட்சியின் அலங்கோல ஆட்சியைப் பற்றியும், அதனால் மக்கள் படும் கஷ்டங்களைப் பற்றியும் விரிவாக எடுத்துப் பேசினார். சென்னைப் பொதுக்கூட்டத்தில் பேசி முடித்ததும், சென்னையில் சில தினங்கள் தங்கி விட்டு பாராளுமன்றத்தில் பேசவதற்காகத் தேவர் டில்லி சென்றார். 1957ல் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேவர், முதுகுளத்தூர் கலவரம், பின்னர் கைது என்று சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் பாராளுமன்றத்தில் பேச வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. 1959 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ராஷ்டிரபதி உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு தேவர் 17.2.1959ல் பேசினார். ஆளும் அரசின் போக்கு பற்றியும், வெளிநாட்டுப் பிரச்சினைகள் குறித்தும், மக்கள் வாழ்நிலை குறித்தும் தேவர் விரிவாகப் பேசினார்.இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் 18.2.59ம் தேதி டெல்லி பதிப்பு தேவரின் உரை பற்றி எழுதியதாவது. "பாராளுமன்றத்தில் அன்று கடைசிப் பேச்சாளரான தேவர், தமது தீவிர மிக்க பேச்சின் மூலம் சபையின் முழுக்கவனத்தையும் தம்பால் குவிய வைத்து விட்டார் தேவரின் வெண்கலக்குரல் பாராளுமன்றத்தை ஈர்த்தது"
.
.
No comments:
Post a Comment