கருணாஸ் தேவர்




 கருணாஸ் அவர்களோடு ஒரு கலந்துரையாடல்:



திடீரென தேவர் பேரவைக்கூட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பிச்சிருக்கீங்களே?


“பிறப்பிலிருந்து இறப்பு வரை மனிதனுக்கு சாதி தேவைப்படுகிறது. இடைப்பட்ட காலத்திலும் எந்தெந்த ரூபத்திலோ சாதி அடையாளம் உபயோகிக்கப்படுகிறது. ஆனால், சினிமாவில் இருக்கிற பலரும் ஏனோ சாதி சாயல் வந்துவிடக்கூடாது என நினைக்கிறார்கள்.அப்படி பயப்படவேண்டிய அவசியம் இல்லை.


கருணாஸ் எல்லோருக்கும் பொதுவான நடிகர்தானே, அவருக்கு இதுமாதிரியான சாயம் தேவையா? என்பது போன்ற விமர்சனங்களைச் சந்திக்க நேரிடுமே?


சாதிக்கும் கலைக்கும் என்னசம்பந்தம்? கலை என்பது இனம், மொழி கடந்தது. கமல்ஹாசன் தேவர்மகனில் நடித்தபோது அவரை ஐயராகவா பார்த்தார்கள்? தென் மாவட்டங்களில் அந்த படம் முந்நூறு நாட்கள் ஓடவில்லையா?... எனக்கு இது தேவையா என நினைப்பவர்கள்தான் சாதி வெறி பிடித்தவர்கள். எந்த விஷயங்களிலும் சாதியை பயன்படுத்தாமல் இருக்கச்சொல்லுங்கள் பார்ப்போம். அதுமட்டும் இங்கு சாத்தியமேயில்லை.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜாதி தலைவர் இல்லை. அரசியல்வாதிகளில் அப்பழுக்கற்றவர் தேவர். சுதந்திர போராட்ட வீர்ர், கடைசிவரை திருமணமே செய்துகொள்ளாமல் தனது சொத்துக்களை மக்களுக்கே கொடுத்த தியாகி. 57-ல்பார்வர்டு பிளாக் கட்சியை தென்னகத்தில் கொண்டுவந்து 30 எம்.எல்.ஏக்களை கொடுத்தவர். அடுத்தவரின் பணம் ஒரு ரூபாய்க்கு கூட ஆசைப்படாத ஆன்மீகவாதி. தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று சொன்ன அற்புத மனிதர். இப்படிப்பட்ட ஒருவரை இனி உலகம் காணாது. இந்த தேசியத் தலைவரை, அரசியல் தலைவரை சிலர் தங்களின் சுய லாபத்திற்காக ஜாதித்தலைவராகத் திரித்துவிட்டது எனக்கு வருத்தம் தரும் விஷயமாக இருக்கிறது.



இவ்வளவு சொல்லும் நீங்கள், ’முக்குலத்தோரின் முகவரி’ என்னும் பெயரில் ஆல்பம் வெளியிட்டுள்ளீர்களே?


இன்றைய சமுதாயம் மறைந்த மூத்ததலைவர்களை மதிக்கணும். முன்னோர்களை நினைப்பது நமது கடமை. அந்த வகையில்தான் நான் அந்த ஆல்பத்தை வெளியிட்டேன். இதற்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? நான் யாருக்கும் தாழ்ந்தவனல்ல, எனக்கு தாழ்ந்தவரும் இல்லை என்று நினைப்பவன் இந்த கருணாஸ். இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர். இந்த மூவர்தான்முக்குலம் என்பது எனது கருத்து.


தேவர் பேரவையிலிருந்து பதவிகொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

ஒருபோதும் ஏற்கமாட்டேன். சிறு வயதிலிருந்தே எனக்கு அரசியல் தெரியும். காசு வாங்கிக்கொண்டு ஓட்டுபோடுவதும், ஓட்டு வாங்கிக்கொள்பவர்கள் மக்களை மறப்பதும் ஜனநாயகம் கிடையாது. இதில் நான் பதவிக்கு வந்து நான் என்ன கிழிக்கப்போறேன்?


வருங்காலத்தில் இதற்கான சாத்தியம் உண்டா?


மனிதனும் மாற்றத்திற்கு உட்பட்டவன், உலகமும் மாற்றத்திற்கு உட்பட்டது. மாற்றம் ஒன்றே மாறாதது. எனினும் என்னை பற்றி மற்றவர்களைவிட எனக்கு நன்றாகவே தெரியும். நான் ஒரு போராளி. ஒன்றைஅடைவதற்கு நான் சாக வேண்டுமென்றால் அதற்கும் நான் தயார். என் வீட்டில் ஐந்துகார்கள் இருந்தது. திடீரென ஒரு கார்தான் இருக்கிறது. எதுவும் இங்கே நிரந்தரம் இல்லைஎன்பதை நான் உணர்ந்த தருணம் அது. இது நிலையில்லாத உலகம். எதன் பேரிலும் ஜனங்களை ஏமாற்ற முடியாது. அப்படி ஏமாற்றுபவர்கள் பின் விளைவுகளை நிச்சயம் சந்திப்பார்கள்.


யாரை மனதில் வைத்துக்கொண்டு இதனைச் சொல்கிறீர்கள்?


யாரையும் நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை. அப்படி பேசினால், நிறை பேசவேண்டியிருக்கும். இப்போதைக்குவேண்டாம்.

வேறு திட்டம் ஏதும் மனதில் இருக்கிறதா?

இருக்கு. ஜாதி,மதம் கடந்தவராகத்தான் நான் தேவரை பார்க்கிறேன். தேவர் ஜெயந்தி விழாவுக்கு சென்றபோது, தனித்தனி அமைப்புகளாக அவரது சமாதிக்கு மாலை போட்டதை நான் பார்த்தேன். அந்த நிமிஷம் ரத்தக் கண்ணீர் வராத குறைதான். அந்த அமைப்புகளை ஒற்றுமைப்படுத்தும் முயற்சியை வருங்காலத்தில் எடுக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.



நன்றி: தெனாலி

வீரமங்கை வேலுநாச்சியார்





வீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.


எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் வேலுநாச்சியார் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.


இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள சக்கந்தி யென்ற ஊரில் 1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி(முத்து விஜயரகுநாதசெல்லத்துரை சேதுபதி) - முத்தாத்தாள் நாச்சியாருக்கு ஒரே பெண் மகவாக வேலுநாச்சியார் பிறந்தார்.தந்தை .செல்லமுத்து சேதுபதி தன் மகளுக்குப் போர்க்களம் சென்று வாளெடுத்துப் போர் புரியும் பயிற்சி அளித்து ஒரு சிறந்த வீராங்கனையாகவே வளர்த்தார்.


வேலுநாச்சியார் வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் சிறந்து விளங்கினார்.பத்து மொழிகள் திறம்பட அறிந்திருந்தார். மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும். இப்படி வீறுகொண்டும் வேலு கொண்டும் வளர்ந்த இளம் பெண் வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை 1746ம் வருடம் மணமுடித்தார்.


ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது. நவாபின் அடுத்த குறி சிவகங்கையாக இருந்தது.நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டான் நவாப். ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாபின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர். கொடூரமாய் தாக்கினர். ஆங்கிலேயர் கொடுத்த போர்ச் சாதனங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. வடுகநாதர் வாளால் வெட்டப்பட்டு இறந்தார் இளவரசியும் கொல்லப்பட்டார். காளையர் கோயில் கோட்டை நவாப்படைகளின் வசமாகியது.


திடீர் தாக்குதலில் கோட்டை வீழ்ந்து மன்னர் இறந்துவிட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு எட்டியது. கதறி அழுதார். கணவரின் உடலைப் பார்க்க வேண்டும் என்று துடித்தார். தானிருந்த இடத்திலிருந்து காளையர் கோயிலுக்குச் செல்ல விரும்பினார். இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன் போரிட்டார். எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார். இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென்பதுதான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால் தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். 'கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார். நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால் நவாபை பழிவாங்கமுடியாது. நாட்டைக் கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும். அதனால் அங்கே போகக் கூடாது' என்றார்கள். ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.


வேலு நாச்சியார் காளையர் கோயிலில் கண்ட காட்சி கொடூரமானது. எங்கெங்கும் பிணக் குவியல். கோயில் திடலின் நடுவே அரசரும் இளையராணியும் ரத்தம் வடிந்து இறந்து கிடந்தார்கள்.கதறி அழுதார் நாச்சியார். கணவனைக் கொன்ற கயவர்களைப் பழிவாங்கியே தீரவேண்டும்சபதமேற்றார்.


பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள். வேலு நாச்சியார் வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி. நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி.


அப்போது வேலுநச்சியார் சார்பாக தாண்டவராயப் பிள்ளை அன்றைய மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கு ஒரு கடிதம் எழுதி அதில் ஹைதர் அலி தன்னிடமிருந்து 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும் அனுப்பி வைத்தால் அவர்களுடன் சேர்ந்து நவாப்புக்கு எதிராகப் போரிட்டு இராமநாதபுரம் மற்றும் சிவகங்கைச் சீமை ஆகியவற்றை ஆற்காடு நவாப் வசமிருந்து மீட்க முடியும் என நம்பிக்கை தெரிவித்து உதவி கோரினார்.


அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லிலிருந்தார். ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான். 'வேலு நாச்சியார் வரவில்லையா?'' என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன். அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம். தன் வேதனைகளையும் இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார். அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார்.


மருது சகோதரர்களின் துணையுடன், ஹைதர் அலி அளித்த பாதுகாப்பிலேயே விருப்பாச்சியில் எட்டு ஆண்டுகள் வேலு நாச்சியார் தனக்கு வேண்டிய பணிப் பெண்களுடனும், வீரர்களுடனும், விருப்பாட்சி கோட்டை, திண்டுக்கல் கோட்டைகளில் பாதுகாப்பாகத் தங்கினார். அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர். வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாபை வீழ்த்துவது. சிவகங்கை சீமையில் தனது பரம்பரை சின்னமான அனுமன் கொடியை பறக்க விடுவது. அதற்கான நாளும் வந்தது. ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப்படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார். முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால்தான் சிவகங்கையை மீட்க முடியும். வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார்.சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது.


விஜயதசமி,நவராத்திரி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக மாறுவேடத்தில் புகுந்து அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது.இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.


பின்னொரு நாளில் வேலுநாச்சியாரின் படையின் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள்.வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்து தானெடுத்த சபதத்தை நிறைவேற்றி சிவகங்கையின் அரசியானார்.சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது.கிட்டத்தட்டப் பத்து ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்து சிவகங்கைச் சீமையைச் செம்மையாக வைத்திருந்தார்.ராணி வேலுநாச்சியார்

1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். 1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையிலேயே தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் 25 டிசம்பர் 1796 அன்று இறந்தார்.தன் கணவரை ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆக்கிரமிப்பாளர்களுக்குக் காளையார் கோவில் போரில் காவு கொடுத்து விட்டு, துவண்டு போய் மூலையில் அமர்ந்து விடாமல் சிவகங்கைச் சீமையை மீட்டெடுக்கப் போராடிய இந்த வீரமங்கையின் சிலை மருது சகோதரர்கள் சிலைகளுடன், காளையார் கோவில் சிற்பத்தில் கம்பீரமாய் நிற்கிறது.

வேலு நாச்சியாருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது.அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.



நன்றி : விக்கிபீடியா,ஈகரை,மரத்தடி




....

தைப்பூசத்தில் தேவர்


ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று, வடலூரில், சமரச சுத்த சன்மார்க்கம் பற்றி பேசுவார் தேவர். அவரது பேச்சைக் கேட்பதற்காகவே, வள்ளலாரின் பக்தர்கள் ஆயிரக்கணக்கான பேர் வருவர். தைப்பூசத்தன்று, வடலூரில் தேவர் பேசத் துவங்குவதற்கு முன், முன்னாள் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், தேவரிடம் ஒரு செய்தியைச் சொன்னார்.

"வடலூர் ராமலிங்க அடிகளாரின் உறவினர் ஒருவருடைய வீட்டில், ராமலிங்க அடிகளார் பாடிய, இதுவரை அச்சுக்கு வராத ஒன்பது பாடல்கள் அடங்கிய ஏட்டுச் சுவடி இருக்கிறது. அதை மடத்திற்குத் தந்தால், நூல் வடிவாக, எல்லாரும் படிக்கும் வண்ணம் அச்சில் ஏற்றி வெளிக்கொண்டு வரலாம்... ஆனால், அடிகளாரின் உறவினரிடம் பலமுறை கேட்டும் கொடுக்க மறுக்கின்றனர். தாங்கள் தான் இதற்கொரு வழி செய்ய வேண்டும்!' என்றார்.
"அந்தச் சுவடியை வரவழைக்க வேண்டிய விதத்தில் வரவழைப்போம்; நீங்கள் கவலைப்பட வேண்டாம்!' என்று ஓ.பி. ஆரிடம் கூறிவிட்டுப் பேச்சைத் துவங்கினார் தேவர். ராமலிங்க அடிகளாரின் அருட்பாவைப் பற்றி ஒருமணி நேரம் பேசிவிட்டு, இறுதியாக, தேவர் உறுதிபட கூறியதாவது...


"ராமலிங்க அடிகளால் பாடப்பட்டு, இதுவரை அச்சுக்கு வராமல் உள்ள ஏட்டுச் சுவடியில் ஒன்பது பாடல்கள் இருப்பதாகவும், அந்தச் சுவடியை, ராமலிங்க அடிகளாரின் உறவினர் ஒருவர் வைத்துகொண்டு, மடத்துக்குக் கொடுக்க மறுப்பதாகவும், ஓ.பி.ராமசாமி ரெட்டியார் அவர்கள் என்னிடம் சொன்னார்!


"அடிகளாரின் உறவினருக்கு, இந்தக் கூட்டத்தின் வாயிலாகச் சொல்கிறேன்... அந்தச் சுவடியை மடத்துக்குத் தந்து, மக்களுக்குப் பயன்படும்படி செய்யுங்கள் அல்லது தாங்களே அந்தச் சுவடியை நூலாக வெளியிடுங்கள். இரண்டையும் செய்யாமல் பிடிவாதமாக இருப்பதால், அடிகளாரின் அந்த ஒன்பது பாடல்களும், இந்த உலகத்திற்கு தெரியாமலே போய்விடும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்! இதுவரை உலகத்துக்குத் தெரியாமல் நீங்கள் வைத்திருந்த அந்த ஒன்பது பாடல்களையும் அடியேன் பாடுகிறேன், கேளுங்கள்...' என்று, அந்த ஒன்பது பாடல்களையும், மடைதிறந்த வெள்ளம் போல, "மட,மட...'வெனத் தன் வெண்கல குரலில் பாடி முடித்தார். ராமலிங்க அடிகளாரின் வெளிவராத அந்த அருட்பாவை, தேவர் திருமகன் பாடியதைக் கேட்ட கூட்டம் வியப்பில் ஆழ்ந்தது; மேடையில் இருந்த பிரமுகர்கள் அதிசயித்தனர். அப்போது ராமலிங்க அடிகளாரின் உறவினர் ஒருவர், கையில் அந்த ஏட்டுச் சுவடியோடு மேடை ஏறி, தேவரைக் கும்பிட்டு, காலில் விழுந்து வணங்கினார்.


பிறகு, தேவரைப் பார்த்து, "ஐயா... நீங்கள் தேவர் அல்லர்; நீங்கள் தான் ராமலிங்க அடிகளார்! என்னை மன்னித்து விடுங்கள்... தாங்கள் பாடிய அந்த ஒன்பது பாடல்கள் தான் இந்த ஏட்டுச் சுவடியில் இருக்கின்றன. இதை ஏற்றுக் கொள்ளுங்கள்!' என்று சுவடியைத் தேவரிடம் தந்தார்.

அந்தச் சுவடியைப் பெற்று, "எல்லாம் ஈசன் செயல்...' என்று தேவர் சொல்லி முடிப்பதற்குள், எழுந்து வந்து தேவரை கட்டிப்பிடித்து, அவரது கைகளை எடுத்துத் தன் கண்களில் ஒற்றி, "ராமலிங்க சுவாமிகளே நீங்கள் தான்!' என்று உரக்கச் சப்தமிட்டு கூறினார் ஒ.பி.ஆர்., அதைக்கேட்ட கூடியிருந்த கூட்டம் பெருத்த கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தது.

நன்றி : எம். எ. பழனியப்பன் எழுதிய, "பசும்பொன் தேவர் திருமகனின் தீரமிகு வரலாறு' நூலிலிருந்து.
நன்றி : தினமலர் 




_

ராஜராஜ சோழன் ஆவணப்படம்

இராஜராஜ சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவராவார்.'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவரது மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவச் செய்யும் பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.

இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவருடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.

இவர் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவான். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவரது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னன் அழைக்கப்பட்டார். இவர் ஆட்சியின் மூன்றாம் ஆண்டு முதலே ராஜ ராஜ சோழன் எனப்பட்டார்.  (988) தந்தை இறந்ததும் இவர் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 12 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவர் காலத்திலும் இவரது மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராஜராஜனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.

ராஜராஜ சோழன் பற்றிய ஆவணப்படத்தை கீழ காணலாம்.அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று.

பகுதி-1
http://www.youtube.com/watch?v=SnANjdReAlY

 பகுதி-2
http://www.youtube.com/watch?v=yJomuGsi2fU

 பகுதி-3
http://www.youtube.com/watch?v=za6nYK4L9ns

 பகுதி-4
http://www.youtube.com/watch?v=c2a0GcoJAjw

 பகுதி-5
http://www.youtube.com/watch?v=hkCjoSJpkJ8



நன்றி : விக்கிபீடியா,யூ டியூப் 


_

முக்குலத்தோர் முகவரி

பசும்பொன் இலக்கியப் பேரவை வெளியிட்டுள்ள "முக்குலத்தோர் முகவரி' என்ற ஆல்பத்துக்கு திரு கருணாஸ் இசை அமைத்து பாடியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் புகழ்பாடும் இந்த ஆல்பத்தில் வைரமுத்து, புலமைப்பித்தன், முருகன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.  இந்த இசை ஆல்பத்தை, அண்மையில் நடைபெற்ற விழாவில் சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா வெளியிட தேவர் பேரவை தலைவர் டாக்டர் ராஜகோபால் பெற்றுக்கொண்டார்.



 
 
 
 
 
 
 

 
 
 
 

நன்றி    :தினமணி,indiaglitz
படங்கள்: பானு,தணியன்,சுந்தர் (ஆர்குட் தேவர்-முக்குலத்தோர் சமூகம்)


தேவர் ஜெயந்தி: தலைவர்கள் மரியாதை


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 102ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் முழு உருவ சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க. தென்மண்டல அமைப்பு செயலாளரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி, தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். அவருடன் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், பெரியசாமி, தங்கம் தென்னரசு, தமிழரசி, மேயர் தேன்மொழி, துணை மேயர் மன்னன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மு.க.அழகிரி பசும்பொன் புறப்பட்டு சென்றார். அ.இ.அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜு தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அவைத்தலைவர் துரைபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. வளர்மதி ஜெபராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். ம.தி.மு.க. சார்பில் பொது செயலாளர் வைகோ தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ராம் பாபு, உள்பட பலர் பங்கேற்றனர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நன்மாறன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளர் கதிரவன், அகில இந்திய பார்வர்டு பிளாக் (சந்தானம் பிரிவு) சந்தானம் தலைமையிலும் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதேபோல் பல்வேறு கட்சியினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
---
நன்றி : http://www.makkalmurasu.com/index.php?mod=article&cat=tamilnadu&article=13734