தேவர் திருமகன் - வைகோ உரை 5


நீதிமன்றத்தில் தேவர் :


நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். புதுக்கோட்டை நீதிமன்றம். அந்த நீதிமன்ற நிகழ்ச்சியைப்பற்றி அப்பொழுது அரசாங்க வழக்கறிஞராக இருந்த எத்திராஜ் சொல்கிறார். சென்னையில் எத்திராஜ் கல்லூரி, அவர் பெயரில்தான் இருக்கிறது. புகழ்பெற்ற வழக்கறிஞர் எத்திராஜ். அவருக்கு உதவி செய்தவர் பின்னாளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கிருக்ஷ்ணசாமி ரெட்டியார். அவரும் அரசுத் தரப்பு வக்கீல்தான். தேவர் திருமகனுக்கு வாதாடியவர் வி.ராசகோபாலச்சாரியார் என்ற புகழ் பெற்ற வக்கீல்.

புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு. குற்றவாளிக் கூண்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நிறுத்தப்பட்டார். அவரைப் பார்த்ததும், எத்திராஜ் உள்ளத்தில் ஏற்பட்ட உணர்ச்சியால், அவர் நீதிபதியைப் பார்த்துச் சொன்னார். ‘இவர் மக்கள் தலைவர். இலட்சக்கணக்கான மக்கள் நேசிக்கிற தலைவர். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அவருக்கு நாற்காலி போட்டுத்தர வேண்டும். அந்த நாற்காலியில் அவரை உட்கார வைக்க வேண்டும்’ என்கிறார்.

இப்பொழுது இருக்கக்கூடிய சட்டத்தின் அடிப்படையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கொடுத்து இருக்கின்ற ஒரு உத்தரவின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை உட்கார வைக்க வேண்டும் என்று ஒரு உத்தரவு இருக்கிறது. அது அப்பொழுது கிடையாது.

ஆனால், அரசுத் தரப்பு வக்கீல் சொல்கிறார், ‘இவர் மாபெரும் தலைவர் இவருக்கு நீங்கள் நாற்காலி கொடுக்க வேண்டும்’ என்று சொல்கிறார். சுற்றும்முற்றும் பார்க்கிறார்கள். நாற்காலி இல்லை. கிருக்ஷ்ணசாமி ரெட்டியார் சொல்கிறார், இது ஆனந்த விகடன் பத்திரிகையில் வந்து இருக்கிறது. ‘என்னுடைய நாற்காலியை அந்தப் பெருமகனுக்குத் தாருங்கள்’ என்று அரசு வக்கீல் சொல்கிறார். நீதிபதி அனந்தசயனம் அய்யங்கார். பின்னாளிலே தலைமை நீதிபதியாக உயர்நீதிமன்றத்துக்கு வந்தவர்.

உடனே உத்தரவு இடுகிறார். ‘நாற்காலி போடுங்கள்’ என்கிறார். நாற்காலியைக் கொண்டுவந்து போடுகிறார்கள். வழக்கத்தை மீறி கரவொலி எழுகிறது. பொதுவாக நீதிமன்றத்தில் கைதட்டக்கூடாது. வெளியே இருந்து வந்த மக்கள் எல்லாம் கரவொலி எழுப்புகிறார்கள்.

கிருக்ஷ்ணசாமி ரெட்டியார் குறிப்பிடுகிறார். ‘பகல் உணவுக்காக இருதரப்பு வழக்கறிஞர்களும் வெளியே சென்றுவிடுவார்கள். எல்லோரும் போய் விடுவார்கள். ஆனால்,தேவர் திருமகன் அந்த நாற்காலியை விட்டு அசைய மாட்டார். காலையில் இருந்து மாலை வரை ஒருசொட்டுத் தண்ணீர் குடிக்க மாட்டார் நீதிமன்றத்தில். யாரிடமும் பேச மாட்டார். இடைவேளை நேரத்தில் கூட யாரிடமும் பேசமாட்டார். அமைதியாக அமர்ந்தே இருப்பார். ’ என்று சொல்கிறார்.

வள்ளலாரும் தேவரும் :

இந்தக் காட்சியைப் பார்த்தவுடன் நினைவுக்கு வருவது, அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை வடலூர் வள்ளலார்தான். அவர் மீது ஆறுமுக நாவலர் வழக்குத் தொடுத்து, நீதிமன்றத்துக்கு உள்ளே வடலூர் வள்ளலார் வருகிறபோது, குற்றம் சாட்டிய ஆறுமுக நாவலர் உள்பட, நீதிபதியும் எழுந்து நின்றதாக இந்த நாட்டின் கடந்த கால நிகழ்வுகள் சொல்லுகின்றன.

வடலூர் வள்ளலாரைப் போலவே, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாருக்கும் நீதிமன்றத்திலே அப்படிப்பட்ட கெளரவம் கொடுக்கப்பட்டது. அவர் விடுவிக்கப்பட்டார். ஆனாலும், அவர் உள்ளம் வாடியது. மனம் உடைந்தார். வேதனையைச் சுமந்தார்.

அதற்குப்பிறகுதான், கிட்டத்தட்ட நான் முன்னே குறிப்பிட்டதைப்போல, ஒவ்வொரு முறையும் அவர் அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதிக்கு நின்றாலும் சரி, திருவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு நின்றாலும் சரி, 1952, 1957, மீண்டும் 1962 அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி 1952, 1957 இலும் அவர் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் சேர்ந்தே போட்டி இட்டார். ஓட்டுக் கேட்கப் போகாமல் வெற்றி பெற்ற ஒரு தலைவன் உண்டென்று சொன்னால் அது பசும்பொன் தேவர் திருமகனார்தான். அதைப்போல தொகுதிக்குச் செல்லாமல் வெற்றி பெற்றவர், கேரளாவில் மஞ்சேரி தொகுதியில் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத். ஓட்டுக் கேட்கச் செல்லாமல் நோய்ப்படுக்கையில் இருந்துகொண்டே கோடிக்கணக்கில் வாக்குகளை வாரிக் குவித்தவர் புரட்சித் தலைவர்.

பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள் நாடாளுமன்றத்தில் அற்புதமான உரைகளை ஆற்றி இருக்கிறார்.

1959 ஆம் ஆண்டுக்குப்பிறகு, மூன்று ஆண்டுகள் கழித்துப் பேசுகிறார். 1962 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி அவர் பேசுகிறபோது சொல்கிறார். ‘1959 ஆம் ஆண்டில் கடைசியாக உங்களை நான் சந்தித்தேன். மகாஜனங்களே, மனித தெய்வங்களாக நான் மதிக்கின்ற ஒருமித்த சக்தியான உங்கள் முன்னால் இன்றைக்கு இருக்கிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் உங்களிடத்தில் பேசினேன். அன்றைய நாளைப்போலவே இன்றைக்கும் இலட்சம் பேர் வந்து இருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு, அப்போது அவர் தெரிவிக்கின்ற செய்திகள், இன்றைக்கு மதுரை மக்கள் யோசிக்க வேண்டிய செய்திகள்.

காலத்தை வென்ற வரிகள் :

சில கருத்துகள் எந்தக் காலத்துக்கும் பொருத்தமாக இருக்கும். வள்ளுவன் கருத்தைப்போல, எந்தக் காலத்துக்கும் பொருத்தமாக இருக்கும். அதுபோல, தேவர் திருமகன் சொன்ன வார்த்தைகள், இன்றைக்கும் எல்லோராலும் உச்சரிக்கப்படுகின்ற சொற்கள்.

‘வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்.

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்’,

‘பெண்ணுக்கு உயிர் கற்பு’, ‘மனிதனுக்கு உயிர் மானம்’

என்று முழங்கினார்.

ஆள் தூக்கிச் சட்டத்தை அடியோடு அகற்றுவதற்குத்

தோள்தட்டி நின்றாரடி கிளியே

துணிவுள்ள தேவர் சிங்கம்.


இது நாட்டுப்புறப் பாடல்.

அப்படி தன்னுடைய வாழ்வில், அடக்குமுறைகளை எதிர்த்து நாட்டுக்காகப் போராடிய தலைவர், தனக்கென்று எதையுமே நாடிக்கொள்ளாத தேடிக் கொள்ளாத, விளம்பரப்படுத்திக்கொள்ளாத தலைவர் அவர்.

இன்றைக்குத் தேவர் திருமகன் உயிரோடு இருந்தால் எதைச் சொல்வாரோ அதைச் சொல்கிறேன். அவருடைய கடைசி உரையில், இதைத்தான் குறிப்பிடுகிறார்.

எனக்கு எதிரிகள் இல்லை :

‘நான் என் சக்திக்கு மீறி காங்கிரஸ் கட்சிக்கு உழைத்தேன். என் சக்தியைக் கடந்தும் நான் காங்கிரஸ் கட்சியை வளர்க்கப் பாடுபட்டேன். ஆனால், அதே காங்கிரஸ் கட்சி, என் மீது கொலைக்குற்றம் சாட்டிற்று. அதை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக முறையற்ற செயல்கள் பலவற்றில் அது ஈடுபட்டது. நான் சிந்திப்பது, நான் பேசுவது, நான் எழுதுவது, நான் செயல்படுவது எல்லாமே தேசத்துக்காகத்தான். நான் எனக்கென்று எதையும் தேடுவது இல்லை என்று திட்ட வட்டமாக முடிவெடுத்தவன் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நான் எவரையும் எதிரியாகக் கருதவில்லை. எனக்கென்று எதையும் தேடாத நான், யாருக்கு எப்படி எதிரியாக முடியும்?

இது தேவர் வாக்கு. :

யாரையும் நான் எதிரியாகக் கருதவில்லை. யார் மீதும் ஆத்திரம் இல்லை என்று சொல்கிறார். என்னை எதிரியாகவோ, நண்பனாகவோ கருதுகிறவர்கள், அவரவர்கள் விருப்பப்படி கருதிக் கொள்ளட்டும் என்று சொல்லிவிட்டு, ‘நான் பதவியை விரும்பாதவன் என்பது உங்களுக்குத் தெரியும். ராஜாஜி பதவியைப் பார்த்துச் சலித்தவர் என்பதும் உங்களுக்குத் தெரியும். எனக்கு ஏதோ பதவி வேண்டும் என்பதற்காக அல்ல. எது உண்மையோ, மக்களுக்கு எது நியாயமோ அதை பச்சைபச்சையாகச் சொல்கிற நான், ஆளும் கூட்டத்துக்கு அனுசரணையாக இருக்க முடியாது என்பது எனக்குத் தெரியும்.

இன்றைக்கும் பொருந்தும் :

ஆனால், ஆளுகிற அரசு அதிகாரத்தை அவர்களே தொடர்ந்து ஆளவேண்டும் என்பதற்காக அக்கிரமம் செய்கிறார்கள். அக்கிரமமான சூழ்நிலையில் மக்கள் சிக்கி இருக்கிறார்கள் என்றார். திடீரென்று யாராவது ஒருவர் இந்த நேரத்தில் மதுரைக்கு வந்து, தற்செயலாக பேருந்து நிலையத்தில் இருந்து, ரயிலடியில் இருந்து வந்து, இந்தப் பேச்சை இப்பொழுது கேட்டால், தேவர் திருமகன் அன்றைக்குச் சொன்னது என்று நினைக்க மாட்டார்கள். ஒரு அக்கிரமமான சூழலில் மக்கள் சிக்கி இருக்கிறார்கள் என்று இன்றைக்குத் தமிழகத்தில், அதிலும் குறிப்பாக மதுரையில் இருக்கிற நிலைமையைத்தான் வைகோ பேசுகிறான் என்று நினைப்பார்கள். நான் வேறு ஒன்றும் சொல்லவில்லை.

தேவர் அவர்களுக்கே உரிய நாகரிகமான மொழியில், முரடர்கள் என்று சொல்கிறார். குண்டர்கள், காலிப்பயல்கள் என்று சொல்லாமல், ரவுடிகள் என்று சொல்லாமல், நாட்டு மக்களின் உரிமைகளை வேட்டையாடுகின்ற காட்டுமிராண்டிகளின் கூட்டம் என்று சொல்லாமல், முரடர்கள் என்று சொன்னார். வைகோ சொல்வான், ஆனால் அன்றைக்கு இருந்த நிலைமைக்கு அது தேவை இல்லை, இன்றைக்கு அது தேவை இருப்பதால் நான் அதைச்சொல்வேன். ஆனால், அவர் சொல்கிறார் ‘முரடர்களைப் பயன்படுத்து கிறார்கள். பலாத்காரத்தைப் பயன்படுத்துகிறது அதிகாரத்தின் மூலம் பயமுறுத்துகிறது’ என்று சொல்கிறார்.

அன்று சொன்னது இன்றும் நடக்கிறது :

தேவர் திருமகன் சொன்னது எல்லா காலத்துக்கும் பொருந்தும் அல்லவா?

தேவர் திருமகன் அன்றைக்குச் சொல்கிறார். இன்று நடப்பது என்ன? ஆளும்கூட்டம் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டு, தொடர்ந்து ஆட்சி நடத்துவதற்காக, எங்கே அவர்களுக்குப் பலம் இல்லையோ அங்கே முரட்டுத் தனமான ஆட்களை, முரடர்களை ஏவி கலவரம் செய்கிறார்கள்.


தேவர் திருமகன் அவர்கள், ‘ஜனநாயகத்தில் ஆளுங்கட்சியும்,எதிர்க்கட்சியும் இரண்டு கண்களில் ஒரு கண். இரண்டு கண்களும் சரியாக இருந்தால்தான் பயணம் சரியாக இருக்கும். இல்லாவிட்டால் இடறும் மூளியாகும் நிலைமை ஏற்படும். இந்த அக்கிரமச் சக்திகளை உடனே தடுத்து நிறுத்தாவிட்டால், பிறகு எப்பொழுதுமே தடுக்க முடியாது. இந்த நாசசக்திகளே சாஸ்வதமாகி விடும். மதுரைக்கு அப்படிப்பட்ட அபாயம் நேர்ந்துவிடக்கூடாது இப்பொழுது. நாசசக்திகளே சாஸ்வதமாகி விடக்கூடாது’ என்றார்.


ஆட்சியும், அதிகாரமும் இருக்கிறது என்பதால், இன்றைக்கு மதுரையில் அக்கிரமம் செய்கிறார்களே? மேற்குத் தொகுதி, மத்தியத் தொகுதி வாக்காளப் பெருமக்களே, நான் மக்கள் ஆட்சியை மதிப்பவன்தான். ஆனால் தேவர் திருமகன் சொன்னார். இலஞ்சம் கொடுத்து, பணம் கொடுத்து அதிகாரத்தைத் தக்கவைக்க நினைப்பவர்களைப்பற்றி அந்தக் கூட்டத்தில் சொன்னார். ‘மகாஜனங்களே, முளைப்பாரிக் கொட்டுக்கு 2 ரூபாய் செலவழித்துப் போய்ப் பார்க்கிறீர்கள். ஜல்லிக்கட்டைப் பார்க்க 4 ரூபாய் கொடுத்து பார்த்து ரசித்துவிட்டு வருகிறீர்கள். சினிமாவுக்கு 5 ரூபாய் கொடுத்து பார்த்து அனுபவித்து வருகிறீர்கள்.

ஆனால், ஓட்டுப் போடுவதற்கு நமக்கு எவனாவது காசு, பணம் தருவானா? என்று நீங்கள் எதிர்பார்க்கலாமா? என்று கேட்டார்.

காவல்துறை எங்கே? :

இன்றைக்குப் பல இலட்சம் பேர் வந்தார்களே, நாங்கள் ஏன் தாமதமாக வந்தோம்? மூன்று மணிநேரம் தாமதமாகத்தான் பசும்பொன்னுக்கு உள்ளே செல்ல முடிந்தது என்றால், மக்கள் கூட்டம் பல இலட்சம்.


வேதனையோடு நான் குற்றம்சாட்ட விரும்புகிறேன். முதல் அமைச்சர் அவர்களே, உங்களிடம் காவல்துறை இருக்கிறது. இன்றைக்குப் பத்து இலட்சம் பேர் கூடுகின்ற இடத்தில் ஏன் காவல்துறை பாதுகாப்பு இல்லை? எத்தனை பேர் வந்தார்கள்? எங்கே இருந்தார்கள்? வந்த ஒன்றிரண்டு காவல் துறையினரும் அவரவர்கள் வேலையைப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். அப்படியானால் எதற்கு காவல்துறை?


நேற்றைக்கு ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருக்ஷ்ணசாமி வேல் கம்பால் தாக்கப்பட்டு உள்ளார். கொஞ்சம் மயிரிழை அளவு வேல்கம்பு மேலே பாய்ந்து இருந்தால், இதயத்தில் பாய்ந்து உயிரே போய் இருக்கும்.


ஈரோடு கவுந்தம்பாடி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, விடியற்காலை 4 மணிக்கு மதுரைக்கு வந்தேன். நேராக நான் அப்பல்லோ மருத்துவமனைக்கு பதட்டத்துடன் சென்றேன். விபரீதம் ஏதும் நடந்துவிடக்கூடாது என்ற கவலையில் சென்றேன். அரசியல் எல்லைகள் என்பது வேறு, மனிதாபிமானம் என்பது வேறு. மருத்துவர்கள் சொன்னார்கள், ஒன்றும் பயப்பட வேண்டியது இல்லை, உயிருக்கு ஆபத்து இல்லை’ என்றார்கள்.

இலட்சக்கணக்கான மக்கள் கூடப்போகிற விழா நிகழ்ச்சியை ஒட்டி, எந்த நேரமும் பதட்டமான நிலைமை ஏற்படக்கூடும் என்ற கடந்தகால சரித்திரத்தை மனதில் கருதி, இந்தத் தலைவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீங்கள் ஏன் உத்தரவு போடவில்லை? உங்களது உளவுத்துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது? தமிழ்நாடு காவல்துறையின் உளவுப்பிரிவினுடைய தவறு, தோல்வி. கடமை தவறிய தோல்வி. இதற்குத்தானே வைத்து இருக்கிறீர்கள்? வேறு எதற்கு வைத்து இருக்கிறீர்கள்? உங்கள் சொந்தக் குடும்பங்கள் விவாகாரங்களைக் கவனிக்க மட்டும் வைத்து இருக்கிறீர்களா? இன்றைக்குப் பல்லாயிரக்கணக்கான போலிஸ் கொண்டுவந்து நிறுத்தி இருக்க வேண்டாமா? போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி இருக்க வேண்டாமா? ஒரு சின்ன அசம்பாவிதம் நடந்துவிட்டால் எவ்வளவு பெரிய கேடு நடந்துவிடும்?

கடமையைச் செய்யவில்லை :

புரட்சித் தலைவியின் ஆட்சியில்தானே தென்னாட்டிலே எந்தக் கலவரமும் இல்லாமல் அமைதிப் பூங்காவாக இருந்தது. யாரும் மறுக்க முடியாது. ஆனால், உங்கள் ஆட்சியில்தான் இரத்தக் களரியும், பிணங்கள் விழுந்தவண்ணமாக இருந்தது கடந்தமுறை? அந்த மாதிரி நிலைமை வந்து விடவே கூடாது. ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டால், தீப்பொறி வதந்திகளாகி, அதற்கு கண், காது, மூக்கு வைத்து, கையும் காலும் முளைத்து, விஷமிகள், சமூக விரோதிகள், இருக்கிற சமூக ஒற்றுமையைக் குலைக்க, கலவரம் நடத்த இதையே பயன்படுத்தும் ஒரு சூழ்நிலை வந்து விடக்கூடாதே என்ற கவலையில் செயல்பட்டு இருக்க வேண்டாமா?

தமிழ்நாடு அரசு கடமையைச் செய்யவில்லை.நல்லவேளை, எந்தச் சம்பவமும் நடக்கவில்லை. தேவர் திருமகனின் புகழ் நிலைக்கட்டும்.

இளைஞர்களால் பெருமை :

பெருமையோடு சொல்கிறேன் தோழர்களே, இன்றைக்கு வந்தவர்களில் 80 சதவிகிதம் இளைஞர்கள். நான் இந்தத் தமிழ் மண்ணை எண்ணிப் பெருமைப்படுகிறேன். ஒரு சின்ன அசம்பாவிதம் கூடக் கிடையாது. காவல்துறை கடமையாற்ற விட்டாலும், அவரவர்கள் பொறுப்போடு இருந்து, இந்நிகழ்ச்சியில் எந்தச் சின்ன சலசலப்புக்கும் இடம் இல்லாமல், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - திராவிட முன்னேற்றக் கழகம் - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் - பார்வர்டு பிளாக் கட்சி - காங்கிரஸ் - பொதுவுடைமை இயக்கம் - சமூக அமைப்புகள் - முக்குலத்தோர் அமைப்புகள் பல்வேறு அமைப்புகள் என இத்தனை இலட்சம்பேரும் வந்து எந்த சின்ன பிரச்சனைகூட இல்லை என்பதால் நான் பெருமைப்படுகிறேன்.

இன்றைக்குப் பசும்பொன்னுக்கு வந்துவிட்டுப்போன வாலிபர்கள், இளைஞர்களை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். அவ்வளவு கட்டுப்பாடோடு நடந்து, முதல்வர் கடமை தவறினாலும், இந்த மண்ணின் மக்கள், இந்த மண்ணின் மைந்தர்கள் கடமையைச் செய்து இருக்கிறார்கள்.

உத்தமத் தலைவனின் புகழ் வாழ்க!

‘கட்டுண்டோம் பொறுத்து இருப்போம். காலம் மாறும்’ என்றான் பாரதி. அதைப்போல, காலம் மாறும், காரியங்கள் தானாக நடக்கும். இது தேவர் திருமகன் அருள்வாக்கு. தேவர் திருமகனாரின் நூறாவது ஆண்டு இது தொடக்கவிழா. வாழ்நாள் எல்லாம் நாட்டுக்காகவே வாழ்ந்த உத்தமத் தலைவனின் புகழ் வளரட்டும்!

தேவர் பெருமகனாரே, பசும்பொன் தங்கமே, தென்னாட்டுச் சிங்கமே, எளியவனான எனக்கு, உள்ளத்துக்கு வலிமையும் நியாயத்துக்குப் போராடுகிற வலுவையும் என் உடலுக்கும் தோள்களுக்கும் அருள்வீராக!


நன்றி, வணக்கம்!

(வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.)


(தேவர் ஜெயந்தி விழா, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி சந்திப்பு, மதுரை 30.10.2007)

_

2 comments:

  1. தேவர் பற்றிய வழக்கு விசாரணையை விரிவாக எடுத்துப்போட்டால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்.

    ReplyDelete
  2. மதுரையில் தேவர் ஜெயந்தி நூற்றாண்டு விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றி வைகோ பேசிய காணொளிகளின் சுட்டிகள்



    1. http://www.youtube.com/watch?v=Si---T7v6ww&feature=related


    2. http://www.youtube.com/watch?v=fG6vuKEKdw4


    3. http://www.youtube.com/watch?v=n-ai_ghWv5M


    4. http://www.youtube.com/watch?v=aCEWsEbXmDw&feature=related


    5. http://www.youtube.com/watch?v=lA8Y9TUVHqE&feature=related


    6. http://www.youtube.com/watch?v=sYj8bQL0vG4&feature=related


    7. http://www.youtube.com/watch?v=PoJZ7te_-XY&feature=related

    ReplyDelete