ஒச்சாயி தமிழ்ப் பெயர் இல்லையா?





முக்குலத்தோர் சமூகத்தினரின் குல தெய்வமான ஒச்சாயி என்ற பெயர் தமிழ்ப் பெயரா என்று தமிழக அரசு கேட்டிருப்பதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழகத்தின் முக்கிய சமூகங்களில் ஒன்று முக்குலத்தோர் சமுதாயம். இந்த சமுதாயத்தினரின் குல தெய்வங்களில் ஒன்று ஒச்சாயி அம்மன். இந்தப் பெயரைத் தழுவி முக்குலத்தோர் சமுதாயத்தினர் பெயர்களை வைப்பது காலம் காலமாக இருந்து வரும் ஒரு பழக்கம்.
ஒச்சு, ஒச்சாயி என்ற பெயர்கள் ஒவ்வொரு முக்குலத்தோர் வீடுகளிலும் சாதாரணமாக காணப்படுவதைக் காணலாம். முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தின் தந்தையின் பெயர் ஒச்சாத் தேவர் என்பதாகும்.

இப்படி முக்குலத்தோர் சமுதாயத்தின் குல தெய்வமான ஒச்சாயி என்ற பெயரை தமிழ்ப் பெயரா என்று கேட்டு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது தமிழக அரசு.

உசிலம்பட்டியைச் சேர்ந்த ஓ. ஆசைத்தம்பி என்பவரது இயக்கத்தில்உருவாகியிருக்கும் படம்தான் ஒச்சாயி. புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு தமிழ்ப் பெயர்களில் அமைந்த திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி சலுகையை தர மறுத்து விட்டதாம் தமிழகஅரசு. காரணம், ஒச்சாயி என்ற பெயர் தமிழ்ப் பெயரா என்று கேட்டு மறுத்துள்ளது.

இது தென் மாவட்டங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வ குவார்ட்டர் கட்டிங் என்ற பெயரிலேயே ஒரு தமிழ்ப் படம் உருவாகியுள்ளது. இதற்கு கேளிக்கை வரி விலக்கும் அளித்துள்ளனர். அப்படி இருக்கையில் ஒரு தமிழ்ச் சமூகத்தின் குல தெய்வத்தின் பெயரைக் கொண்ட படத்துக்கு தமிழ்ப் பெயரா என்று கேட்டிருப்பது வேதனை தருவதாக முக்குலத்தோர் சமுதாயத்தினர் கூறுகிறார்கள்.

தென் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர், ஒச்சாயி என்ற பெயரில் வாழ்ந்து வருகின்றனர். இது மொழிப்பற்றால் கேட்கப்படும் கேள்வியாகத் தோன்றவில்லை, ஆதிக்கம் செலுத்துவோர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.

இதுகுறித்து ஒச்சாயி பட இயக்குநர் ஒ.ஆசைத்தம்பி கூறுகையில், உசிலம்பட்டி பகுதியில் கள்ளர் சமுதாய மக்களின் குலதெய்வமான ஒச்சாயி பெயரை உடைய பெண் சம்பந்தப்பட்ட சமுதாயக் கதையைத்தான் ஒச்சாயி படமாக எடுத்துள்ளேன்.

எனக்கு மட்டுமல்ல, இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகர் வாகை சந்திரசேகர் ஆகியோருக்கும் ஒச்சாயி அம்மன் குலதெய்வமாகவும் உள்ளது. இந்த நிலையில் ஒச்சாயி தமிழ்ப் பெயரா? எனக் கேட்பது சரியல்ல. ஆகவே படத்துக்கு வரிவிலக்கு அளிக்கக் கோரியுள்ளோம் என்றார்.

ஒச்சாயி தமிழ்ப் பெயர்தான்-தா.பாண்டியன்

இந்த நிலையில், ஒச்சாயி என்பது தமிழ்ப் பெயர்தான் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒச்சாயி என்ற பெயரில் ஒரு தமிழ்ப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழில் பெயர் சூட்டப்பட்ட திரைப்படங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளபடி, ஒச்சாயி படத்த்துக்கும் தரப்படவேண்டும்.

ஆனால், சம்பந்தப்பட்ட இலாகா அதிகரிகள், ஒச்சாயி - தமிழ் தானா? நிரூபணம் தேவை எனக் கேட்டுள்ளனராம். தென் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர், ஒச்சாயி என்ற பெயரில் வாழ்ந்து வருகின்றனர்.

'ஒச்சாயி'' என்ற பெயர்ச் சொல், தமிழ் அல்ல என்றால், பல்லாயிரம் தமிழ்மொழி பேசும் தாய்மாரை அவமதிக்கும் செயலாகக் கருதப்படும். எனவே, தவறை திருத்திக் கொண்டு, ஒச்சாயிக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என தா.பாண்டியன் கூறியுள்ளார்.
 நன்றி :
http://thatstamil.oneindia.in/movies/news/2010/10/tamil-cinema-ochayi-tamil-tha-pandian.html

1 comment:

  1. குழந்தை பிறந்தவுடன் பார்க்க வரும் மக்கள் "மச்சம், ஒச்சம் எதுவும் இருக்கா?" என்று கேட்பதைப் பார்த்துள்ளேன். மச்சம் கரும் புள்ளியைக் குறிக்கும். ஒச்சம் என்பது உடலில் உள்ள குறைபாட்டைக் குறிக்கும். (கை, கால் வளைவு, உதடு வெடித்திருப்பது, கண் விழி கோணலாக இருப்பது)

    ஒச்சம் தமிழ்ச் சொல்லே!

    பேச்சு வழக்கில் மட்டும் உள்ள சொற்களை மாவட்டவாரியாக சேகரித்தால் பல அரிய சொற்கள் தமிழுக்குக் கிடைக்கும்.

    ReplyDelete