இனிச் சோழநாட்டு நிலைக்கு வருவோம். சிலம்பிற்குச் சற்று முன்பு சோழநாடு இரண்டானது சிலம்பிலேயே வெளிப்படுகிறது.
வள நாட்டுச் சோழன் (உறையூர்ச் சோழன்) ஒரு கிள்ளி/வளவன். இவன் செங்குட்டுவனின் மாமன் மகன். உறையூர் அரசு கட்டிலில் அவனை ஏற்றியவனும் செங்குட்டுவனே.
நாகநாட்டுச் சோழன் (புகார்ச்சோழன்) ஒரு செம்பியன்; செங்குட்டுவனை மதியாதவன். [நாக நாடு என்பது சிலம்புக் காலத்தில் புகாரைச் சுற்றிய சிறு நாடு. இதுவும் சோழநாடு தான். நாக நாட்டை சரியாக அடையாளம் காணாது அதனைப் ”பாதாள உலகம்” என்று புரிந்துகொண்டவர் பலர். நாக நாடு என்பது ஒருபக்கம் புகாருக்கு அருகிலும், இன்னொரு பக்கம் யாழ்ப்பாணத்திலும் விரிந்தது போலும் (26). நாகனார் தீவான நயினாத் தீவு, மணிபல்லவம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. புகாருக்கே, நாகரோடு தொடர்புடைய சம்பாதி என்ற பெயரும் உண்டு. தவிர அதே நாட்டுள் நாக(ர்)பட்டினம் என்ற இன்னொரு துறைமுகமும் உண்டு.]
நாகநாடும், வளநாடும், நாடுகாண் காதை (40-43) வரிகளின் படிச் சிறு நாடுகளாவே இருந்திருக்கின்றன. காடுகாண் காதையில் வரும் வரிகளை (27A) ஆய்ந்து பார்த்தால் இந்த நாடுகளின் நீட்சியை ஓரளவு அறியலாம். புகார் நகரிலிருந்து காவிரியை ஒட்டினாற் போல் நாகநாட்டின் எல்லை வெறும் 50-60 கி.மீ மட்டுமே இருந்தது என்று நம்பமுடிகிறாதா? அண்மை ஆய்வின் முடிவில் இவ்வுண்மை அறிந்து நானும் வியப்பில் ஆழ்ந்தேன் (27B) இதே போல, வளநாட்டின் கிழக்கெல்லை திருவரங்கத்திற்கு அருகிலே முடிந்து விடுகிறது. நாகநாட்டின் வடக்கெல்லை தென்பெண்ணையாற்றில் இருந்திருக்கலாம். வளநாட்டின் வடக்கெல்லை தெரியவில்லை. வளநாட்டின் மேற்கெல்லை உறையூருக்கும், கொங்குக் கருவூருக்கும் இடைப்பட்டது. பொதுவாக, வளநாடும், நாகநாடும் சிலம்பின் காலத்தில் சிறு நாடுகள். வளநாட்டிற்கும் நாகநாட்டிற்கும் இடைத்தொலைவு காவிரியை ஒட்டி பாண்டியனிடமே இருந்திருக்கிறது. இது மாங்காட்டு மறையவன் கூற்றால் விளங்குகிறது (28).)
பாண்டியன் நெடுஞ்செழியனும், அவன் தம்பி வெற்றிவேற் செழியனும் கூட செங்குட்டுவன் மேலாளுமையை ஏற்காதவர். [”இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம்” என்ற கொலைக்களக் காதை 163 வரிகளின் பின் செழியன்மகன் பற்றிக் குறிப்பு வருகிறது. மதுரை எரியுண்டதில் செழியன் மகன் இறந்ததால், கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன், நெடுஞ்செழியனின் தம்பியாய் இருக்கவே வாய்ப்பு அதிகம்.]
thanks : http://valavu.blogspot.com/2010/05/6_14.html
...
No comments:
Post a Comment