சங்க இலக்கியம் குறிப்பிடும் கடற்கொள்ளையர்கள் யார்?

வடக்கே வேங்கட மலையும் தெற்கே தென்குமரியும் பண்டைத் தமிழகத்தின் எல்லைகளாக இருந்தன.தமிழகம்,ஆந்திரா,கர்நாடகா,கேரளம் உள்ளிட்ட பரந்த தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்தனர்.இவர்களுள் சேரர் என்பவர் இன்றைய கேரளப் பகுதிகளை ஆண்டவர்கள் எனப் புரிதலுக்காகக் குறிப்பிடலாம்.

சேர மன்னர்களின் வரலாற்றை அறிவிக்கும் நூல்போல் விளங்குவது பதிற்றுப்பத்து என்னும் சங்க இலக்கியமாகும்.இதில் பத்துப் புலவர்கள் பத்து சேர மன்னர்களைப் பற்றிப் பாடிய பத்துப் பத்துப் பாடல்களின் தொகுதியான நூறு பாடல்களை இந்நூல் கொண்டிருந்தது. முதற் பத்தும் கடைசிப் பத்தும் நீங்கலாக எண்பது பாடல்கள்தான் அதாவது எட்டுப் பத்துகள்தான் இன்று கிடைத்துள்ளன.

இவற்றுள் இரண்டாம் பத்து என்னும் பகுதியைப் பாடிய புலவர் குமட்டூர்க் கண்ணனார் ஆவார்.இவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.இப்புலவரைச் சிறப்பிக்க நினைத்த மன்னன் இமயவரம்பன் உம்பற்காட்டுப் பகுதியில்(மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கிழக்குப் பகுதி) ஐந்நூறு ஊர்களையும், தென்னாட்டு வருவாயில் முப்பத்தெட்டு ஆண்டுவரை பகுதியும் வழங்கினான் என அறிய முடிகிறது.

கடம்பர் என்ற கடற்கொள்ளையரை அழித்து வெற்றியுடன் மீண்ட இமயவரம்பன் செடுஞ்சேர லாதனை அவன் நாட்டு மக்கள் பாராட்டி வரவேற்றனர்.அக்காட்சியைக் கண்ட புலவர் பெருமா னுக்குக், கடலுள் மாமர வடிவில் இருந்த சூரபத்மனை அழித்து மீண்ட முருகன் நினைவுக்கு வருகின்றான்.அம் முருகனாகவே புலவர் இமயவரம்பனை எண்ணிப் பாடியுள்ளார்.

கடம்பர்கள் என்பவர்கள் கடலிடை உள்ள தீவுகளை வாழிடமாகக் கொண்டு அவ்வழிச் செல்லும் கலங்களைக்(கப்பல்களை) கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இக் கொடியவர்களால் தம் நாட்டில் நடைபெற்று வந்த கடல்வணிகம் பாதிக்கப்பட்டதை அறிந்த இமயவரம்பன் அக்கடம்பர் பகுதி மீது(அரபிக்கடல் பகுதியில்)படையெடுத்தான்.

சேரநாட்டுப் படை மறவர்கள் கடம்பர்களின் கலத்தையும் நாட்டையும் பாழ்படுத்தினர்.சேரர் படையுடன் போரில் வெற்றிபெற முடியாது என உணர்ந்த கடம்பர்கள் தங்கள் காவல் மரத்தை மட்டுமாவது காத்துக்கொள்ள நினைத்தனர்.அவர்களின் காவல் மரமான கடம்ப மரத்தை அழிக்கும் முன் கடம்பர்களையும் சேரர் படை அழித்தது.கடம்ப மரத்தை அடியோடு வெட்டி வீழ்த்தி,வீழ்ந்த கடம்பமரதைக் குடைந்து முரசாக்கி மறவர்கள் முழக்கம் செய்தனர்.அம் முழக்கொலி கேட்ட சேரநாட்டுப் படை மறவர்களும் மக்களும் ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர். இதனைக் கண்ட குமட்டூர்க் கண்ணனார்,

"வரைமருள் புணரி வான்பிசிர் உடைய,
வளிபாய்ந்து அட்ட துளங்கு இரும் கமஞ்சூல்
ஒளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி
அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்
கடுஞ்சின விறள்வேள் களிறு ஊர்ந்தாங்கு...

"பலர்மொசிந்(து) ஓம்பிய அலர்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்று எறி முழங்குபணை செய்த வெல்போர்
நார்அரி நறவின் ஆர மார்பின்,
போர்அடு தானைச் சேர லாத!" (பதிற்றுப்பத்து 2: 1-16)

எனவும்,

"துளங்கு பிசிர்உடைய மாக்கடல் நீக்கிக்
கடம்பறுத்து இயற்றிய வலம்படு வியன்பனை" (பதிற்றுப்பத்து 17: 4-5)

எனவும்

"இருமுந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச்சென்று
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேர லாதன் " (பதிற்றுப்பத்து 20 :2-5)

எனவும் பாடியுள்ளார்.

அகநானூற்றுப் புலவர் மாமூலனார் அவர்கள்(கி.மு.மூன்றாம் நூற்றாண்டு.பார்க்க: பே.க.வேலாயுதனாரின் சங்ககால மன்னர் வரிசை,1997)

"சால்பெரும் தானைச் சேரலாதன்
மால்கடல் ஒட்டிக் கடம்பறுத்து இயற்றிய
பண்அமை முரசின் கண்அதிர்ந்தன்ன"(அகம். 347)

(பொருள் :பெரும் படையுடையவன் சேரலாதன்.அவன் பெரிய கடலில் பகைவர்களை அழித்து அவர்களின் கடம்ப மரத்தை அறுத்து முரசு செய்தான்.அம் முரசு முழங்கியது போல)

எனவும்

"வலம்படு முரசிற் சேரலாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பறுத்து" (அகம். 127 )

(பொருள்: வெற்றி தரும் முரசத்தையுடையவன் சேரலாதன்.அவன் கடலில் பகைவரை வென்று அவரது காவல் மரத்தை வெட்டினான்)எனவும் பாராட்டியுள்ளனர்.

பண்டு கிரேக்க,உரோமை நாடுகளுக்குச் சேரநாட்டு யானைத் தந்தங்கள்,மிளகு முதலிய பொருள்களும் பாண்டியநாட்டு முத்து உள்ளிட்டவையும் மேலைக்கடற்கரை வழிச் சென்றமையும் அந்நாட்டின் செல்வம்,பொருள்கள் தமிழகம் வந்ததையும் வரலாற்றால் அறிகிறோம்.அவற்றைக் கடம்பர்கள் கொள்ளையடித்ததையும் ஒருவாறு உய்த்துணர முடிகிறது.

இப்பாடலடிகளின் வழியாக இன்று சோமாலிய கடற்கொள்ளையர்கள் செய்யும் வேலைகளைப் பண்டைய கடம்பர்கள் செய்தனர் போலும்.இவை பற்றி விரிவாக ஆராய இடம் உள்ளது. கடம்பர்கள் இல்லை.கதம்பர்கள் எனப் பொருள்கொள்ளும் அறிஞர்களும் உள்ளனர்.இக் கதம்பர்கள் மைசூர் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள் எனவும் அறியமுடிகிறது.தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.


நன்றி: முனைவர் மு.இளங்கோவன்




....

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பற்றிய சில குறிப்புகள்

சேர மன்னர்களை இரு பிரிவினராகக் கொள்ள இடம் உள்ளதை அறிஞர் பே.க.வேலாயுதம் அவர்கள் குறிப்பிடுகிறார்(பக்.8).அவை ஒரு சாரார் உதியன் மரபினர் எனவும் மற்றொரு சாரார் இரும்பொறை மரபினர் எனவும் அழைக்கப்படுவதைக் குறிப்பிடுவார்.உதியன் மரபினர் தம்பெயரில் குட்டுவன் என்ற பெயரை இணைத்து வழங்குவதையும் இரும்பொறை மரபில் அம்மரபைக் காணமுடியவில்லை எனவும் குறிப்பிடுகிறார்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சேரநாட்டின் அரசனாக "மாந்தை" என்னும் ஊரைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்தவன்.இவனுக்கு இரு மனைவியர் இருந்துள்ளனர். பட்டத்து அரசியாக விளங்கியவள் வேளாவிக் கோமான் பதுமன்தேவி.இவர்களுக்குக் களங்காய் கண்ணி நார்முடிச்சேரல் என்ற மகனும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற மகனும் இருந்தனர்.

பிறிதொரு மனைவியான சோழன் மணக்கிள்ளியின் மகளுக்கும் (பெயர் அறியமுடியவில்லை)
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் மகனாகக் கடல்பிறக்கு ஓட்டிய வெல்கெழு குட்டுவன் என்னும் மகனும் இருந்தான்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன்மணக்கிள்ளி மகளுக்கும் பிறந்த கடல்பிறக்கு ஓட்டிய வெல்கெழுகுட்டுவன் என்பவனைச் செங்குட்டுவனாகச்(கண்ணகிக்குக் கல் எடுத்தவன்) சிலர் கருதுவர்.ஆனால் சிலப்பதிகாரச் செங்குட்டுவனின் தந்தை சேரலாதன் ஆவான்.தாய் ஞாயிற்றுச் சோழன் எனப்படும் சோழன் நல்லுருத்திரனின் மகள் நற்சோணை ஆவாள். செங்குட்டுவனின் தாய் நற்சோணை பட்டத்தரசியாவாள்.

வெல்கெழு குட்டுவன் சேரநாட்டை ஆளும்பொழுது(கி.மு.250- கி.மு.175) பிற பகுதிகளைக் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலும் அவன் தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் ஆட்சி செய்துள்ளனர்.ஆனால் சேரன் செங்குட்டுவன் சேரநாட்டை ஆட்சி செய்தபொழுது(கி.பி.50- கி,பி.125) பிறர் யாரும் சேரநாட்டை ஆண்டதற்கான குறிப்புகள் இல்லை.

எனவே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் அவன் மகன் கடல்பிறக்கோட்டிய வெல்கெழு குட்டுவனுக்கும் காலத்தால் பிந்தியவன் சேரலாதன் மகன் செங்குட்டுவன்(சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் அரசன்) என்பதை அறிதல் வேண்டும்.

கடல் பிறக்கோட்டிய வெல்கெழுக்குட்டுவன் காலத்திலும் கடற்கொள்ளையர்கள் தொல்லை தந்துள்ளனர்.

கடற்கொள்ளைத் தொழில் செய்த கடம்பர்களின் மூலத் தாயகம் கொண்கானக்கரை எனப் பிற்கால வரலாற்று நூல்கள் சுட்டுகின்றன.ஆனால் கடம்பர்களின் பண்டையத்தளம் கடற்கரையில் இல்லாது கடலின் உள்ளே தீவில் இருந்திருக்க வேண்டும் என அறிஞர் கா.அப்பாத்துரையார் கருதுகிறார்(தென்னாட்டுப் போர்க்களங்கள்,ப.100).இத் தீவைக் கிரேக்கர்கள் "லெயூகே" அதாவது வெள்ளைத்தீவு என அழைத்தனர்.அது மங்களூரை அடுத்த தூவக்கல் என்ற தீவு என ஆய்வாளர்கள் கருதுவதையும் கா.அப்பாத்துரையார் தம் நூலில் குறிக்கின்றார்.

"லெயூகே" என்ற கிரேக்கச் சொல்லும் "தூவக்கல்" என்னும் பழந்தமிழ்ச் சொல்லும் இரண்டும்
வெள்ளைத் தீவைக் குறிப்பதாகும்.வெள்ளைத்தீவு எது?. தேடிப் பார்ப்போம்.

(ஒன்று மட்டும் விளங்குகிறது.தமிழக வரலாற்றுச் சான்றுகள் தமிழகத்தில் மட்டும் இல்லாமல் கேரள,கருநாடக,ஆந்திரப் பகுதிகளில் மிகுந்து கிடக்கின்றன.அவை கல்வெட்டுகள் ஊர்ப்பெயர்கள்,நம்பிக்கைகள்,இறைவழிபாடு எனப் பெருகிக் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்களைப் புரிந்துகொள்ள மலையாள, கன்னட, துளுத்தேசங்களைச் சுற்றிப் பார்க்க வேண்டும்.)


நன்றி: முனைவர் மு.இளங்கோவன்




....

அழகர்கோயில்(கங்கைகொண்டசோழபுரம்) யானை...

அழகர் கோயில் யானை முகப்பு

அழகர்கோயில்(கங்கைகொண்டசோழபுரம்) யானை...

கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து வடக்கே எட்டுக் கல் தொலைவில் உள்ள ஊர் சலுப்பை. அதற்கு முன்பாகவே சத்திரம் என்னும் ஊர் உள்ளது.சலுப்பை - சத்திரம் சந்திக்கும் இடத்தில் புகழ்பெற்ற அழகர் கோயில் உள்ளது.அக்கோயிலில் "துறவுமேல் அழகர்" உள்ளார்.துறவியாக வாழ்ந்து அடக்கமான அழகர் இறப்புக்குப் பிறகு இன்றுள்ள கருவறையில் அடக்கம் செய்யப்பட்டது போன்ற தோற்றம் உள்ளதே தவிர அழகருக்கு உருவம் இல்லை.

அழகர் பற்றி வாய்மொழியாகப் பல கதைகள் உள்ளன.முறைப்படி தொகுக்கப்படவில்லை. நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் இதில் கவனம் செலுத்தலாம்.அழகர் கடும் சினம் உடையவர் என்றும் இவர் கோயில் அடர்ந்த காசாங் காட்டுக்கு நடுவே இருந்தது எனவும் மூத்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.அச்சமூட்டும் காட்டுக்கு நடுவே அழகர் கோயில் இருந்தது.

முப்பது ஆண்டுகளுக்கு முன் யானும் என் தந்தையார்,அம்மா,தங்கை உள்ளிட்ட குடும்பத்தினரும் ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்குச் சென்றுள்ளோம்.

எங்கள் இடைக்கட்டு வீட்டிலிருந்து மாளிகைமேடு,கங்கைகொண்டசோழபுரம் வழியே கொல்லைகளின் ஊடாகப் புகுந்து காட்டுவழியில் நடந்து சென்றுவந்த நினைவு உள்ளது. அப்பொழுது அந்தக் கோயில் பற்றி என் அப்பா பல கதைகள் சொல்வார்.

அங்குள்ள கோயிலுக்கு வருபவர்கள் கிடாவெட்டியும் பூசை செய்வது உண்டு.ஆனால் அழகருக்கு அது படைப்பது இல்லை.அழகர் புலால் உணவுக்காரர்.அருகில் உள்ள வீரபத்திரசாமி,கருப்பசாமி உள்ளிட்ட பிற சாமிகளுக்குதான் கிடாவெட்டிப் படைப்பர். அழகருக்கு சைவமுறையிலான படையல்தானாம்.

சமைத்த ஏனங்களை மக்கள் அங்குள்ள திருக்குளத்தில் போட்டு வந்துவிடுவார்கள்.அடுத்த ஆண்டு சென்று அடையாளமாக அதனை எடுத்துச் சமைத்து உண்பார்கள்.அதுவரை அந்த ஏனங்களை யாரும் எடுப்பதில்லை.கோயிலுக்குப் பல ஏக்கர் நிலம் உண்டு.சிலர் மட்டும்
வருவாய் தருகின்றனர்.

அழகர் பற்றிய வேறொரு செய்தி.

சத்திரம் என்ற பகுதி கங்கைகொண்டசோழபுரத்திலிருந்து வடதிசைச் செல்பவர்கள் தங்கிச் செல்ல உணவு,தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளைப் பண்டு பெற்றிருந்தது.அதனால் அவ்வூருக்குச் சத்திரம் என்று பெயர்.இப்பகுதியில் பார்ப்பனச்சேரி(அக்கிரகாரம்)இருந்துள்ளது. காட்டில் அழகர் சாமி தவத்தில் இருந்ததாகவும் பார்ப்பனப் பெண்கள் இருவர் அங்கு உள்ள கிணற்றில் நிர் எடுக்க வந்ததாகவும் அப்பெண்கள் முனிவர் அருகில் இருந்த குடத்தை எடுத்து தண்ணீர் மொண்டதாகவும் தவம் கலைந்த முனிவர் அப்பெண்களைக் கிணற்றில் இறக்கும்படி செய்ததாகவும் இறந்த அந்த இரண்டுபெண்களும் தாமரை மலராக கிணற்றில் கிடந்ததாகவும் முனிவர் அக்கிணற்றில் இறந்ததாகவும் அக்கிணறுதான் பின்னாளில் வழிபடும் இடமாக மாறியதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.அதன் நினைவாகவே அழகர் கோயில்
உருவாகியுள்ளது.

அக்கிணற்றின் மேல் ஒரு படுக்கைக் கல்தான் இன்றும் மூலவர் நினைவாக வழிபடப்படுகிறதே அல்லால் முனிவருக்குச் சிலை இல்லை.(30.12.2008 களப்பணியில் பெற்ற தகவல். திரு. சேகர் என்பவர் வழி இத்தகவலை உறுதிசெய்துகொண்டேன்).

கோயிலுக்குப் பொங்கலை ஒட்டியும் தை மாதத்திலும் ஆடிமாதத்திலும் வெள்ளிக் கிழமைகளில் மக்கள் கூட்டமாக வந்து வழிபடுகின்றனர்.பொங்கல் முடிந்த கரிநாளில் நல்ல கூட்டம் இருக்கும் பல சாதியைச் சேர்ந்த மக்களும் வந்து வழிபடுகின்றனர்.செங்குந்தர் இனமக்கள் பலருக்கு இது குல தெய்வமாக உள்ளது. செங்குந்தபுரம், வாரியங்காவல், கொடுக்கூர், குவாகம், இலையூர், ஆண்டிமடம்,சின்னவளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந் தும் புதுவை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் செங்குந்தர் இனமக்கள் அதிக அளவில் வந்து வழிபடுகின்றனர்.

காலத்திற்கு ஏற்பப் போக்குவரத்திற்கு இன்று சாலை வசதிகள் உண்டு.மீன்சுருட்டியிலிருந்து மேற்கே ஐந்து கல் தொலைவில் உள்ளதால் மீன்சுருட்டியிலிருந்தும் அழகர் கோயிலை அடையலாம்.

இங்கு உள்ள யானைச் சிற்பம் உலகப் புகழ் பெற்றது.இது அழகர் ஏறி ஊர்வலம் செல்லும் பயன்பாட்டிற்கு என அதன் நினைவாக உள்ளது.இதன் காலம் காட்டும் சான்றுகள் அங்கு வைக்கப்படவில்லை.தொல்லியல் துறை இதுபற்றி விளக்கம் குறிப்பிட்டால் பயனாக இருக்கும்.கங்கைகொண்டசோழபுரம் சார்ந்த எத்தனையோ வரலாற்றுத் தரவுகள் சிதைந்ததுள்ளன.அச் சிதைவுகள் பலவற்றுள் இதுவும் ஒன்றாகவே உள்ளது.

இச்சிற்பம் தொன்மையானது என்பதால் சிதைந்து காணப்படுகிறது.இச்சிற்பத்தில் இசைக்கருவிகள் வாசிக்கும் கலைஞர்கள் காட்டப்படுகின்றனர்.அவர்கள் கையில் சங்கு, மத்தளம் உள்ளிட்ட இசைக்கருவிகள் உள்ளன.யானை ஒருவனைத் தன் பிடிக்குள் வைத்திருப்பது போல் உள்ளது.யானையின் மேலே மணிகள் உள்ளிட்ட அழகுக்காட்சி நன்கு உருவாக்கப்பட்டுள்ளளது.

யானையின் தென்புறப் பகுதியில் உள்ள மூன்று மாந்தர்களின் உருவம் சிதைந்துள்ளது. யானையின் உருவமும் சிதைந்துள்ளது.யானையின் கால் பகுதியில் வேலைப்பாடு சிறப்பாக உள்ளது.கழுத்தில் உள்ள மணிகள்,அணிகலன்கள் சிறப்பாக உள்ளன.பண்டைக்கால மக்களின் கலை உணர்வு காட்டும் அரிய இதனைப் புதுப்பித்துப் பாதுகாக்கவேண்டும். கங்கைகொண்ட சோழபுரத்திற்குச் சுற்றுலா செல்பவர்கள் குழுவாகச் சென்றுவரலாம்.

இங்குதான் கங்கைகொண்டசோழபுரத்தின் வட எல்லைக் காளிக்கோயில் உள்ளது.

(பின்பும் விரிவாக எழுதுவேன்.என் படங்கள்,செய்திகளை எடுத்தாளுவோர் முறைப்படி இசைவு பெறுக.பெயர் குறிப்பிடுக)

யானை முகப்பு(வேறொரு தோற்றம்)
யானை முகப்பு
யானையின் பிடிக்குள் அகப்பட்டவன்
யானையின் வடபுறத் தோற்றம்
யானையின் வலப்புறத்தில் இசைக்கலைஞர்கள்
யானையின் முழுத்தோற்றம்(தென்புறம்)
யானையின் தென்புறத் தோற்றம்(சிதைவு)
கழுத்துப் பகுதி வேலைப்பாடு
யானையின் கால் பகுதியில் அழகிய வேலைப்பாடு
யானைக்கழுத்தில் அணிகலன்கள்
அழகர்கோயில் திருக்குளம்

புகழ்பெற்ற காளியின் சிலை(அழகர் கோயில்)





நன்றி :
திரு.சொ.அழகுவேல்,உள்கோட்டை.
 முனைவர் மு.இளங்கோவன்.






..

வீரா ரெட்டித்தெரு காளியம்மன் கோயில்(கங்கைகொண்ட சோழபுரம்)

கூரைக் கொட்டகையில்தான் இந்த அரிய சிற்பங்கள் உள்ளன

கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து நான்கு கல் தொலைவில் தெற்கே வீரா ரெட்டித்தெரு என்னும் ஊர்(பகுதி) உள்ளது.(வீரராகவ ரெட்டித்தெரு என்பது முழுவடிவம்) அங்கே புகழ்பெற்ற காளியம்மன் கோயில் உள்ளது.கங்கைகொண்ட சோழபுரத்தின் தென் எல்லைக் காளியாக அது கருதப்படுகிறது.அங்குள்ள புகழ்பெற்ற கல் சிற்பங்கள் இங்கே காட்சிக்கு வைக்கிறேன்.பண்டைக்காலத்தில்(சோழர்கள் காலத்தில்) வட பகுதியிலிருந்து இச்சிற்பங்கள் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் என மக்கள் நம்புகின்றனர்.பாதுகாக்கப்பட வேண்டிய அரிய சிற்பங்கள் இதோ:
காளியம்மன் மார்பளவுப் படம்

சிவலிங்கம் உள்பட காளியம்மன்

காளியம்மன்


நன்றி: முனைவர் மு.இளங்கோவன்





...

கங்கைகொண்டசோழபுரம் - மாளிகை அகழ்வாராய்ச்சி ......

மாளிகைமேடு திசைகாட்டிப் பலகை

கங்கைகொண்ட சோழபுரத்தின் தென்மேற்குப் பகுதியில் இராசேந்திரசோழன் மாளிகை அமைத்து அரசாட்சி செலுத்தினான்(கி.பி.10 ஆம் நூற்.) என்பதை வரலாற்றில் நீங்கள்
படித்திருக்கலாம்.

கங்கைகொண்டசோழபுரம் சற்றொப்ப முந்நூறு ஆண்டுகளுக்கு மேல் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கெல்லாம் தலைநகராக விளங்கியது.இந்தியா,இலங்கை,மலேசியா(கடாரம்), நக்கவாரம்(நிக்கோபார்),கம்போடியா உள்ளிட்ட பகுதிகள் இந்த ஊரிலிருந்து ஆட்சி செய்த அரசர்களுக்குக் கட்டுண்டு கிடந்தது.

பாண்டியப் பேரரசின் எழுச்சியால் வீழ்ச்சியுற்ற சோழப் பேரரசு கால ஓட்டத்தில் இல்லாமல் போனது.மாளிகைகள் மண்மேடாயின.கங்கைகொண்டசோழபுரம் கோயில் மட்டும் சிதைவுகளுடன் எஞ்சி நிற்கின்றது.(பிச்சாவரம் பகுதியில் அரச குடும்பம் சார்ந்த மக்கள் வாழ்வதாக அறிஞர்கள் நம்புகின்றனர்.)

இந்த நிலையில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்ற ம.கோ.இரா அவர்களின் ஆட்சியில்(1980அளவில்) கங்கைகொண்ட சோழபுரம்,மாளிகைமேடு அகழாய்வு வேகம் பெற்றது. இராசேந்திர சோழனின் பிறந்தநாள் விழா கங்கைகொண்டசோழபுரத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கருத்தரங்குகள்,மேடைநிகழ்வுகள் நடந்ததால் மக்களிடம் மிகச்சிறந்த வரலாற்று விழிப்புணர்ச்சி ஏற்பட்டது.

கங்கைகொண்ட சோழபுரத்திற்கு எனச் சென்னையிலிருந்து பேருந்து இயக்கப் பெற்றது. அகழாய்வு வழியக மாளிகைமேடு,கங்கைகொண்டசோழபுரத்தின் சிறப்பு வெளியுலகிற்குத் தெரியவந்தது.ஆனால் அகழாய்வுப்பணி இடையில் நின்றுவிட்டது.பாதுகாக்கப்படவேண்டிய அகழாய்வுக் குழிகள் மழைநீர் தேங்கி எருமைமாடுகள் விழுந்து புரளும் இடமாகிவிட்டன.

சிலைகள் மழையிலும் வெயிலிலும் கவனிப்பாரற்றுச் சிதைந்து வருகின்றன.உலக நாடுகள் அகழாய்வுக்கு எந்த அளவு முதன்மை வழங்குகின்றன என்பதைப் படித்த,பார்த்த என் உள்ளம் அண்மையில் மாளிகைமேட்டைக் கண்ட பொழுது வாடி வருந்தியது.தமிழக வரலாற்றுத் தடயங்கள் பாதுகாக்கப்படாமல் உள்ளதை உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைக்க கீழ்வரும் சில படங்களை உங்களுக்கு வழங்குகிறேன்.

அகழாய்வுப் பகுதிக்குச் செல்லும் வழி
நீர் நிரம்பிய அகழாய்வுக்குழிகள்

அகழாய்வுச் சுவரும் தண்ணீரும்
மடுபோல் காட்சிதரும் ஆய்வுக்குழிகள்
தண்ணீரில் முகம் பார்க்கும் சுவர்கள்
சிதைந்த காப்புச்சுவர்
அகழாய்வுக்குழி வேறொரு தோற்றம்
கற்சிலைகள் காப்பகம்
ஆலமர்செல்வன்
தலை இல்லா அழகிய சிலை
சிதைந்த சிலை

தலையில்லாத தேவி சிலை
 
 
 
நன்றி: முனைவர் மு.இளங்கோவன்





....
 
 

இராசேந்திர சோழனின் கடார(மலேசியா)ப் படையெடுப்பைப் பற்றிய கல்வெட்டு

இராசேந்திர சோழனின் அயல்நாட்டுப் படையெடுப்பு பற்றிய அரிய செய்திகளைத் தாங்கியுள்ள கல்வெட்டு அவனின் 19 ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டு,தஞ்சாவூர் இராசகோபுரத்துக் கர்ப்பகிருகத்தில் தென்புறத்திலுள்ள முதற்படை,இரண்டாம் படைகளில் உள்ளது. தமிழும், கிரந்தமும் கலந்து அமைந்த கல்வெட்டாக இது உள்ளது.

கல்வெட்டால் அறியப்படும் போர்ச்செயல்கள்

கடாரத்தரசனாகிய சங்கிராம விசயோத்துங்கனைத் தோற்கடித்தான்; அவனுடைய செல்வத்தையும் அவன் தலைநகரின் வாசலில் கட்டியிருந்த விச்சாதிரத் தோரணத்தையும், மணிகள் பதிப்பிக்கப்பட்ட இரட்டைக் கதவுகளையும் தன் வசமாக்கிக்கொண்டான்; சுமித்ராத் தீவிலுள்ள விசயம்,பண்ணை,மலையூர் என்னும் ஊர்களை வென்றான். பின் மலேயாத் தீபகற்பத்திலுள்ள மாயிருடிங்கம்,இலங்கா சோகம்,மாபப்பாளம், இலிம்பிங்கம், வளைப்பந்தூறு, தக்கோலம்,மதமாலிங்கம் என்னும் ஊர்களை வென்றான்.பிறகும் சுமித்ராவிலுள்ள இலாமுரிதேசத்தைக் கைக்கொண்டான்; நக்கவாரத் தீவுகளை வென்றான்.மலேயாத் தீபகற்பத்தின் மேலைக் கரையிலுள்ள கடாரத்தை வென்றான்.

உரைநடைப்பகுதியால் அறியப்படும் செய்திகள்

இராசேந்திர சோழன் தஞ்சை இராச ராசேச்சரத்தில் இருந்த தன் குருவாகிய சர்வசிவ பண்டிதர்க்கும்,அவரது சிஷ்யர்களாய் ஆர்யதேசம்,மத்யதேசம், கௌடதேசம் ஆகிய இவ்விடங்களில் இருந்தவர்களுக்கும் சந்திர சூரியர் உள்ளவரை ஆண்டுதோறும் நிறைந்த அளவாக ஆடவல்லான் என்னும் மரக்காலால் இரண்டாயிரம் கல நெல்லை ஆசாரிய போகமாகக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தான்.

கல்வெட்டு மூலம்

1.ஸ்வஸ்திஸ்ரீ திருமன்னி வளர இரு நில மடந்தை(யு)ம் பொற்சயப் பாவையும் சிர்த்தநி (ச் செ)சல்வியும் (த)ன் பெருந்தெவியராகி இன்புற நெடுதியல் ஊழியுள் இடைதுறை நாடும் துடர்வன வெலிப்படர்வன வாசியும் கள்ளி சூழ் மதிள்-

2.கொள்ளிப் பாக்கையும் நண்ணற்கரு (மு)ரண் மண்ணைக் கடக்கமும் பொருகடலீழத் தரைசர்த முடியும் ஆ(ங்)கவர் தெவியர் ஓங்கெழில் முடியும் முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த சுந்தரமுடியும் இந்திர(னா)ரமும் தெண்டிரை ஈழமண்ட-

3.லமுழுவதும் எறிபடைக் கொளன் முறை¬(ம) யிற் சூடுங்குலதனமாகிய பலர் புகழ் முடியும்(ª)சங்கதிர் மாலையும் சங்கதிர் வெலைத்தொல் பெருங்காவற் பல பழந்திவும் செருவிற்சினவி இருபத்தொரு காலரசு களைகட்ட பரசுராமன் -

4.மெவருஞ் சாந்திமத் தீவர(ண்) கருதி இருத்(தியசெ)ம் பொற்றிருத்தகு முடியும் ப(ய)ங்கொடு பழி மிக மு(யங்கி)யில் முதுகிட்டொளித்த சயசிங்கன் அளப்பரும் புகழொடும் பி(டி)யல் இரட்டபாடி எழரை இலக்கமும் நவநெதிக்குலப் பெருமலைக -

5.ளும் விக்கிரம வீரர் சக்கரக்கொட்டமும் முதிர்பட வல்லை மதுர மண்டலமும் காமிடை வளநாம்மணை(க்)கொணையும் வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும் பாசடைப் பழ(ன) மாசுணி தேசமும் அயர்வில் வண்கீர்த்தி ஆதிநகரவையில்

6.சந்திரன் றொல்குலத் திந்திரதனை விளை அமர்களத்துக் கிளையடும் பிடித்துப் பல(தன)த்தொடு நிறைகு(ல) தனக் குவையும் கிட்டருஞ் செறிமி(ளை) ஒட்ட விஷையமும் பூசுரர் செர்நற் கோசலை நாடும் தந்மபால (னை) வெம்மு(னை) யழித்து வண்டுறை சொலைத்த(ண்)ட -

7.புத்தியும் இரணசூரனை முரணுகத் தாக்கி(த்) திக்கணை கீர்த்தி தக்கண(லாடமும் கோவிந்த சத்தன் மாவிழிந் தொட(த்) தங்காத சாரல் வங்காளத் தேசமும் தொடு கழற் சங்கு வொட்ட(ல்) மயிபாலனை வெஞ்சமர் விளாகத் தஞ்சுவித்தரு(ளி) யண்டிறல் யானையும் ª(ப)ண்டி

இரண்டாம் அடுக்கு

8.ர் பண்டாரமும் (நித்தில நெடுங்கடலுடுத்திர)லாடமும் வெறிமலர்த்(தீ)ர்த்தத்தெ (றிபு)னல் கங்கையும் அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச் சங்கிராம விசை யத்துங்க வந்மனாகிய கடாரத்தரசனை வாகயம் பொரு

9.கடல் கும்பக் கரியடு மகப்படுத் துரிமையில் பிறக்கிய பெருனெதிப் பெருக்கமும் ஆர்த்தவனகனகர் (ª)பார்த்தொழில் வாசலில் விச்சாதித் தொரணமும் மொய்த்தொளிர் புனைமணிப்புதவமும் கனமணிக் கதவமும் நிறைசீர் விசையமும துறை -

10.நிர்ப் பண்ணையும் வன்மலையூரெயிற் றொன் மலையூரும் ஆழ்கடலகழ்சூழ் மாயிருடிங்கமும் கலங்காவல் (வி)னை இலங்கா சொகமும் காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும் காவலம் புரிசை மெவிலிம் பங்கமும் விளைப் பந்தூ றுடை வளைப்ப -

11.ந்நூ(று)ம் கலைத்தக் கொர்புகழ் தலைத்தக் கொலமும் திதாமால்வினை மதமாலிங்கமும் கலாமுதிர்க் கடுந்திறல் இலாமுரி தேசமும் தெனக்க வார்பொழில் மானக்கவாரமும் தொடுகடல் காவல் கடுமுரட் கடாரமும்(ம)£-

12.(ப்பொ)ரு தண்டாற்கொண்ட கொப்பாகெஸரி வந்மரான உடையார் ஸ்ரீ ராஜேந்திர சொழதெவர்க்கு யாண்டு யக(19) ஆவது நாள் இருநூற்று நாற்பத்திரண்டினால் உடையார் ஸ்ரீ ராஜேந்திரசொழ தேவர் கங்கைகொண்ட சோழபுர-

13.(த்துக்) கோயிலினுள்ளால் முடிகொண்ட சோழன் திருமாளிகையில் வடபக்கத்து தேவாரத்துச் சுற்றுக் கல்லூரியில் தாநஞ்செய் தருள இருந்து உடையார் ஸ்ரீராஜ ராஜ ஈஸ்வரமுடையார் கோயிலில் ஆசர்ய போகம் நம் உடையார்

14.சர்வ சிவபண்டித (சைய்)வ்வாசார்யாருக்கும் இவ்வுடையார் சிஷ்யரும் பிற சிஷ்யரும் ஆய் ஆர்யதேசத்தும் மத்ய தேசத்துத்தான் ஹெளட தேசத்துத்தான் உள்ளாராய் யோக்யராயிருப்பார்க்கெ ஆட்டாண்டு தொறும் இத்தேவர் கோயிலில் ஆடவல்லா(னெ)-

15.(ன்னு)ம் மரக்காலால் உள்ளூர்ப் பண்டாரத்தே நிறைச் சளவாக இரண்டாயிரக் கலநெல்லு ஆட்டாண்டுதொறும் சந்திராத்தித்தவல் பெறத் திருவாய் மொழிந்தருளத் திருமந்திர ஓலை செம்பியன் விழுப்பரையன் எழுத்தினா-

16.(ல்) த் திருவாய் கேழ்விப்படி கல்லில் வெட்டித்து.இது இவ்வம்சத்துள்ள சைய்வ்வ ஆசாரியர்களே இத்தன்மம் (ர)க்ஷிக்க.

கல்வெட்டின் அரிய சொற்களுக்கு விளக்கம்

அலைகடல் நடுவுள் பல கலஞ்செலுத்தி- சோழர்கள் கப்பல் படைகளை வைத்திருந்தனர் என்பதை உறுதிப்படுத்தும் தொடர்.

சங்கிராமம்-போர்

விசயோத்துங்கன்-(விசய+ உத்துங்கன்) வெற்றியில் மிக மேம்பபட்டவன்

கடாரம்- இது மலேசியாத் தீபகற்பத்திலுள்ள மேல் கரையில் உள்ள ஊர்.இதுபொழுது "கெடா" என வழங்கப்படுகின்றது.பட்டினப்பாலையில் "காழகத்து ஆக்கம்" காழகம் எனப்படுகின்றது. பெரிய லெய்டன் செப்பேட்டில் கடாகம் எனப்படுகின்றது.

புதவமும் கதவமும்- இரட்டைக் கதவுகளையும்(புதவக் கதவம் புடைத்தனன் ஓருநாள் என்பது சிலப்பதிகாரம்)

விசையம்-சுமத்திராத் தீவிலுள்ள பாலம்பாங் என்று வழங்கப்பெறும் தேயம்

பண்ணை- சுமத்திராத் தீவில் கீழ்க்கரையில் உள்ள ஊர்

மாயிருடிங்கம்-மலேயாவில் நடுப்பகுதியில் உள்ளது.சீனதேசத்து நூல்களில் இது ஜிலோடிங் எனப்படுகின்றது.

இலங்காசோகம்-மலேசியாத் தீபகற்பத்திலுள்ள கெடாவிற்குத் தெற்கில் உள்ள ஊர்.

பப்பாளம்- இது கிரா பூசந்திக்குத் தெற்கே மலேசியாவின் மேற்குப்புறத்தே உள்ளது.

தக்கோலம்-இது கிரா பூசந்திக்குத் தெற்கே மலேசியாத் தீபாகற்பத்திற்கு மேற்கே உள்ளது.கிரேக்க ஆசிரியர் தாலமி இதனைத் தகோலா என்று குறிப்பிடுவார்.

மதமாலிங்கம்- மலேசியாத் தீபகற்பத்தின் கீழ்க்கரையில் குவாண்டன் நதியின் முகத்துவாரத்தில் உள்ள தெமிலிங் என்னும் இடமாகும்.சீன நூல்களில் இது தன்மாலிங் எனப்படுகின்றது.

இலமுரிதேசம்-சுமத்திரா தீவில் வடபகுதியில் உள்ளது.மார்க்கபோலா இதை லன்பரி என்பர் சீனர்கள் லான்வூலி என்பர்

நக்கவாரம்-நிக்கோபார்த் தீவுகள்.மணிமேகலை குறிப்பிடும் நாகநாடு இதுவாகும்.

நன்றி
நூல்: முப்பது கல்வெட்டுகள்
நூலாசிரியர்: வித்துவான் வை.சுந்தரேச வாண்டையார்.
முனைவர் மு.இளங்கோவன்..



...

இராசராச சோழன் காலத்துக் கல்வெட்டு உக்கல் கோயிலின் இராசராச சோழன் காலத்துக் கல்வெட்டு

உக்கல் திசைகாட்டி

திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு வட்டத்தில் உக்கல் என்னும் ஊர் உள்ளது.இந்த ஊரை அடைவதற்கு வந்தவாசி-காஞ்சி நெடுஞ்சாலையில் கூழமந்தல் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும்(கூழமந்தல் என்பது பண்டைக்காலத்தில் சோழமண்டலம் என்னும் பெயர் உடைய ஊராகும்.இதனை ஆங்கிலத்தில் chozhamandalam என்று எழுதினர்.இதனை ஒலிக்கத் தெரியாத ஆங்கிலேயர் கூழமந்தல் என்றனர். தமிழறியாத அவர்கள் வாயில் கூழமந்தல் என்று வர அன்றுமுதல் இவ்வூர் கூழமந்தலானது. இவ்வூரில் அழகிய சிவன்கோயில் உள்ளது. சோழர்காலத்துக் கட்டடக்கலைக்குச் சான்றாக உள்ள இந்தக் கோயில் கலையுணர்வுடன் உருவாக்கப்பட்டுள்ளது).

காஞ்சிபுரத்திற்குத் தெற்கே 18 கி.மீ. இல் இந்த ஊர் உள்ளது.அருகில் மாமண்டூர் ஏரி வரலாற்றுச் சிறப்பு மிக்கது(7.கி.மீட்டரில்).உக்கல் ஊரின் சிறப்புகளுள் ஒன்று பெருமாள்கோயில் இங்குக் கட்டப்பட்டுள்ளது.சோழர் காலத்துக் கோயில் என்பதும்,அரிய கல்வெட்டுகள் உள்ளதும் குறிப்பிடத்தகுந்த செய்திகளாகும்.

கூழமந்தலிலிருந்து உக்கல் 3 கி.மீ.நடந்தும், பகிர்வுத்தானியிலும் செல்லலாம்.காலையிலும் மாலையிலும் பேருந்துகள் செல்லும். 1000 குடும்பம் இந்த ஊரில் இருக்கும். 5000 பேர் அளவில் வாழ்கின்றனர். அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அடிப்படை வசதிகளை எதிர் நோக்கிக் காத்திருக்கும் இந்த ஊர் வரலாற்றுச் சிறப்பு மிக்கது.இவ்வூரின் கோயிலும் கல்வெட்டுகளும் பாதுகாக்கப்படாமல் சிதிலமடைந்து கிடக்கின்றன.அரசும்,பொதுமக்களும் இணைந்து இக்கோயிலைப் புதுப்பிக்க வேண்டும்.தொல்பொருள் துறையினர் கட்டுப்பாட்டில் இக்கோயில் இருப்பின் நல்லது.

உக்கல் பெருமாள் கோயிலில் முன்பு புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.இன்று முறையான வழிபாடு இல்லாமலும் பராமரிப்பு இல்லாமலும் உள்ளது.

உக்கல் என்ற ஊரில் உள்ள பெருமாள் கோயிலின் மேற்குப் புறச்சுவரில் உள்ள கல்வெட்டு இராசராசன் காலத்து கல்வெட்டாகும்.இது தமிழும் கிரந்தமும் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
கி.பி 1014 இல் வெட்டப்பட்ட கல்வெட்டாகும் இது. இராசராசனின் வெற்றிச்சிறப்பைக் கூறும் கல்வெட்டு இதுவாகும்.

மெய்க்கீர்த்தியால் அறியப்படும் செய்திகள்.

காந்தளூர்ச்சாலையிலுள்ள கலங்களை அறுத்தருளினான்.வேங்கைநாடு,நுளம்பபாடி,தடி
கைபாடி, குடமலை நாடு,கொல்லம்,கலிங்கம்,ஈழமண்டலம்,இரட்டபாடி,பழந்தீவு இவைகளை இராசராசன் வென்றான் என்று செய்திகள் புலனாகின்றன.

கல்வெட்டால் அறியப்படும் செய்தி

இராசராச சோழனது பணிமகனும், நித்த விநோத வளநாட்டிலுள்ள ஆவூர்க் கூற்றத்து ஆவூரைத் தனக்குப் பிறப்பிடமாகக் கொண்டவனுமாகிய கண்ணன் ஆரூரன்,தன் அரசன் பெயரால் சயங்கொண்ட சோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்துத் தனியூர் உக்கலாகிய விக்கிரமாபரணச் சதுர்வேதி மங்கலத்தின் மேலைப் பெருவழியில் ஒரு கிணற்றை அமைப்பித்து அதற்கு நிவந்தம் அளித்துள்ளான்.

நிவந்தத்தின் வகை

இராசராசன் கிணற்றிலிருந்து தொட்டிக்கு நீர் இறைப்பார்க்கு அருண்மொழித் தேவன் மரக்காலால் நாள் ஒன்றுக்கு நெல் இரு குறுணி ஆகத் திங்கள் ஆறுக்கு நெல் முப்பது கலமும், இராச ராசன் பெயரால் தண்ணீர் வார்ப்பார்க்கு நாடோறும் நெல் இரு குறுணியாகத் திங்கள் ஆறுக்கு முப்பது கலமும்,இப்பந்தலுக்கு மட்கலம் இடுவார்க்குத் திங்கள் ஒன்றுக்கு நெல் இரு தூணியாகத் திங்கள் ஆறுக்கு நெல் நான்கு கலமும், இராச ராசன் கிணற்றுக்கும் தொட்டிக்கும் சேதம் ஏற்பட்டால் அவைகளைப் புதுப்பிக்க ஆண்டுதோறும் இருகலனே இரு தூணி நெல்லும் ஆக 66 கலம் எட்டு மரக்கால் நெல் விளையக் கூடிய நிலத்தின் விலைக்குரிய பணத்தையும், அதற்கு வரிக்கு உரிய பணத்தையும் தனியூர் உக்கலாகிய விக்கிரமாபரணச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார், கண்ணன் ஆரூரனிடம் பெற்றுக்கொண்டு வரி இல்லாமல்(நிலத்தை விற்றுக்கொடுத்து அத்தர்மத்தை நடத்துவதாக இசைந்தனர்)

கல்வெட்டில் அரிய செய்திகள்

இராசராசக் கிணற்றிலிருந்து தொட்டிக்கு நீரிறைப்பார் முதலான பலபணியாளர்களுக்கு ஓர் ஆண்டில் ஆறு மாதங்களுக்குத்தான் கூலிகள் கொடுக்கப்பட்டு வந்தன. தண்ணீர்ப் பந்தல் இக்காலம்போல் அல்லாமல் பண்டைக்காலத்தில் ஆறு மாத காலம் நடத்தப்பெற்று வந்தது என்பது புலனாகின்றது. இக்கல்வெட்டில் வந்துள்ள பெருவழி, பணிமகன்,புதுக்கு என்னும் சொற்கள் தூய தமிழ்ச்சொற்களாகும்.
(கீழே கல்வெட்டின் தட்டச்சு வடிவம்)

1. ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் பொல் பெருநிலச் செ(ல்வி) யுந் தனகெ உரிமை பூண்டமை மனக்கொளக் கா(ந்த) ளூர்ச்சா(லைக)ல (மறுத்த(ரு)ளி (வெக) நாடும் கங்க (பா)டி(யும்) நுளம்ப பாடியு(ந்த)டி(¬)க ப(£) -

2.டியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் முரட்டொழில் சிங்களர் ஈழ (ம)ண்டலமும் (இ)ரட்ட(பா)டி ஏழரை இலக்கமும் முன்(னீ)ர்ப்ப(ழ)ந்(தீவு) பன்(னீ)ராயிர(மும் திண்டி)றல் வெ(ன்)றித் தண்டாற்-

3.கொண்ட தன்னெழில் வளருழியு ளெல்லாய(£)ண்டுந் தொழுதகை விளங்கும் யாண்டெ செழியரை(த்ª)தசுகொள் ஸ்ரீ கொ ராஜ கெஸரி வந்மரான ஸ்ரீ ராஜ ராஜ தேவர்க்கு யாண்-

4.டு,உயக ஆவது ஜயங் கொண்ட சோள மண்டல(த்)துக் காலியூர்க் கொடத்துத் தனியூர் உக்கலாகிய ஸ்ரீ விக்கிரமா பரணச் சதுவெதி மங்கலத் தின் மெலை-

5.ப் பெருவழியில் ஸ்ரீ ராஜ ராஜ தேவர் திரு(ந)£மத்தால்க் கிணறுந் தொட்டியும் சமைப்பித்தான் உடையார் ஸ்ரீ ராஜ ராஜ தேவர் பணிமகன் சௌ (ம)ண்டலத்து ª(த)ன்க¬(ர) நா(ட்)டு நித்த-

6.வினோ(த) வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து (ஆ)வூருடையான் கண்ணனாரூரன்,இவனெ ஸ்ரீ ராஜ ராஜ கி(ணற்)றில் (த் தொட்டிக்கு நீரிறை(ப்)பதார்க்கு அருமொழி தேவன் மரக்கா(ல)£ல் நிசதம் (நெ)ல் ஜுங (ஆ)

7.கத் திங்கள் ச க்கு நெல் ஜ ங ய(கள)மும் ஸ்ரீ ராஜ ராஜன் தண்ணீரட்டுவார்க்கு நிசத(ம்) நெல் ஜ (உங) ஆக திஙள் ச க்கு நெல்லு ஙய (கள)ம் இப் பந்தலுக்கு குசக் கலம் இ (டு)
8.வ(£)ர்க்கு திங்கள் க க்கு நெல்லு வத ஆக திங்கள் ச க்கு நெல்லு (சகள)மும் ஸ்ரீ ராஜ ராஜன் கிணற்(று)க்கு(ம் ª(த)£ட்டிக்(கு)ம் ª(ச)த்தத்துக்கும் ஆட்டாண்டு தொறு(ம் பு(து)க்குப் புறமாக (¬)வச்ச

9.நெல்லு உ கள வத ஆக ஜ ச ய ச(கள)வத இந்நெல்லுக்கு இவன் பக்கல் இவ்வூர் ஸ(பை (யம் இ)¬(ற திர) விய(மு)ம் (கிரய திர) விய (மு)ம் கொண்டு இறை இழிய்ச்சி -

(அளவைக்குறிகளை என்னால் தமிழ் எண்களால் சரியாகக் குறிக்க இயலவில்லை.மேலும் தட்டச்சிட்டவற்றை ஒருங்கு குறிக்கு மாற்றிய பொழுது எழுத்துருக்கள் உடைகின்றன(கால், ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு)அறிஞர் உலகம் மூல நூலைக் கண்டு உறுதிசெய்ய வேண்டுவன்)

நன்றி:
1.30 கல்வெட்டுக்கள்,வித்துவான் வை.சுந்தரேச வாண்டையார்,பழனியப்பா பிரதர்சு வெளியீடு.
2.திருவாளர்கள் கூழமந்தல் உதயகுமார், உக்கல் மோகனவேல்

மற்றும்

முதன்மை நன்றி: முனைவர் மு.இளங்கோவன் - புதுச்சேரி

அந்த வலைபதிவில் கல்வெட்டில் உள்ளதை நான் கொஞ்சம் திருத்தி இங்கே பதிகிறேன்.நான் திருத்தியதில் பிழை இருப்பின் உறவினர்கள் கொஞ்சம் மீண்டும் திருத்தி இங்கே பதியவும்.


ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் போல் பெருநிலச் செல்வியுந்
தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி
வேங்க நாடும், கங்கை பாடியும்,
நுளம்ப பாடியுந் தடிகை பாடியும் ,
குடமலை நாடும், கொல்லமும், கலிங்கமும்,
முரட்டொழில் சிங்களர் ஈழ மண்டலமும்,
இரட்டபாடி ஏழரை இலக்கமும்,
முன்னீர்ப்பழந்தீவு பன்னீராயிரமும்
திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்ட
தன்னெழில் வளருழியுளெல்லாயண்டுந்
தொழுதகை விளங்கும் யாண்டே
செழியரைத்தசுகொள் ஸ்ரீ கோ ராஜ கேஸரி வந்மரான
ஸ்ரீ ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு,


(உயக) ஆவது ஜயங் கொண்ட சோழ மண்டலத்துக் காலியூர்க் கொடத்துத் தனியூர் உக்கலாகிய ஸ்ரீ விக்கிரமா பரணச் சதுர்வேதி மங்கலத்தின் மேலைப் பெருவழியில்
ஸ்ரீ ராஜ ராஜ தேவர் திருநாமத்தால்க் கிணறுந் தொட்டியும் சமைப்பித்தான்.

உடையார் ஸ்ரீ ராஜ ராஜ தேவர் பணிமகன் சோழ மண்டலத்து தன்கர நாட்டு நித்த வினோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து ஆவூருடையான் கண்ணனாரூரன்,

இவனே ஸ்ரீ ராஜ ராஜ கிணற்றில்த் தொட்டிக்கு நீரிறைப்பதற்க்கு அருண் மொழி தேவன் மரக்காலால் நிசதம் நெல் (ஜுங) ஆகத் திங்கள் (ச) க்கு நெல் (ஜ ங ய) களமும் ஸ்ரீ ராஜ ராஜன் தண்ணீரட்டுவார்க்கு நிசதம் நெல் (ஜ உங) ஆக திங்கள் (ச) க்கு நெல்லு (ஙய) களம் இப் பந்தலுக்கு குசக் கலம் இடுவார்க்கு திங்கள் (க) க்கு நெல்லு (வத) ஆக திங்கள் (ச) க்கு நெல்லு (சகள) மும் ஸ்ரீ ராஜ ராஜன் கிணற்றுக்கு தட்டிக்கும் சத்தத்துக்கும் ஆண்டாண்டு தோறும் ஒதுக்குப் புறமாக வச்ச நெல்லு (உ) கள (வத) ஆக, (ஜ ச ய ச) (கள)வத இந்நெல்லுக்கு இவன் பக்கல் இவ்வூர் ஸபையம் இற திரவியமும் கிரய திரவியமும் கொண்டு இறை இழிய்ச்சி

----------------------------------------
--------------------------

இங்கு அடைப்பு குறிக்குள் உள்ளவை அனைத்தும் தமிழ் எண்கள் என்றே நான் கருதுகிறேன்.
(1 = ௧ 2 = ௨ 3 = ௩ 4 = ௪ 5 = ௫ 6 = ௬ 7 = ௭ 8 = ௮ 9 = ௯ 0=0 ) 
நன்றி : இமலன் தேவர் .
..